எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பம் அவசியம் தேவை என்றார் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சி. செந்தமிழ்ச்செல்வன்.
நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவது குறித்தும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் மேலும் கூறியது:
விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் (கடலை) 3 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட்டை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன், ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண்சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். பயிருக்கு தேவையான பேரூட்டச் சத்துக்களுடன், நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.
ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும், அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும். மேலுரமாக இடும்போது, வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும். இதனால் மண் பொலபொலவென இருப்பதால், விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும். காய்கள் முற்றி, தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும், எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.
பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்க, பயிர் பூக்கும் தருணத்தில் 75 நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும். இரண்டு கிலோ டி.ஏ.பி. உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து, மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து, அதிகமான மகசூல் பெறலாம்.
விவசாயிகளுக்குத் தேவையான விதைக் காய்கள் திண்டிவனம்- 7 (டி.எம்.வி-76) விருத்தாசலம்- 2 (வி.ஆர்.ஐ-2) உள்ளிட்ட விதை ரகங்கள் மற்றும் டி.ஏ.பி. அம்மோனியம் சல்பேட், போராக்ஸ், பிளானோபிக்ஸ் ஆகிய உரங்கள் பெரம்பலூர் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது என்றார் அவர்.