Saturday, July 27, 2013

ஆடு வளர்ப்பிலுள்ள பிரச்னைகளும், தீர்வுகளும்

தற்போதைய சூழலில் ஆடு வளர்ப்புத் தொழிலில் உள்ள பிரச்னைகளும், அதற்கானத் தீர்வுகளும் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, வே.உமா, ஜோதிலட்சுமி, எம்.சக்திவேல் ஆகியோர் கூறியது:
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் முதல் பெரும் விவசாயிகள் வரை ஆடு வளர்ப்பை ஒரு முக்கியத் தொழிலாக அல்லது உப தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையில் விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்களின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதால், ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்கக்கூடிய தீவனம் குறைந்து, பராமரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மழையளவு குறைந்து, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் நலிவுற்று வருவதால், கிராமப்புற மக்கள் வேலை தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூலியாள்கள் கிடைக்காமல் ஆடு வளர்ப்புத் தொழில் செய்யத் தடை நிலவுகிறது. மேலும், திடீரென தாக்கும் நோய்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டு இறப்பதாலும் ஆடு வளர்ப்புத் தொழில் நலிவடைந்து வருகிறது.
இடத்துக்கு ஏற்ப சரியான இனத்தைத் தேர்வு செய்யாததும் ஆடு வளர்ப்புத் தொழில் நலிவடைய முக்கியக் காரணமாகும். அந்தவகையில், எந்தவித தொழில்நுட்ப ஆலோசனைகளும் பெறாமல் விவசாயிகள் தன்னிச்சையாக ஏதேனும் ஓர் இனத்தை வாங்கி கலப்பினம் செய்து பிரச்னைக்கு உள்ளாகின்றனர்.
இதற்கு தீர்வு காண விவசாயிகள் முதலில் தரிசு, உபரி நிலங்களை முறையாகச் சீர்படுத்தி, முழுவதும் பயன்படும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
அவற்றில், ஆடுகளுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த புல், பயறு வகைத் தீவனங்கள், தீவன இலைகளைக் கொடுக்கக் கூடிய மரங்களைப் பயிரிடவும் வேண்டும். தவிர, பழ மரங்கள், தென்னை சாகுபடி செய்துள்ளவர்கள் மரங்களுக்கு இடையே கொழுக்கட்டைப் புல் கோ-3, கோஎப்எஸ்-29 சோளம், கினியாபுல், முயல் மசால், வேலி மசால், கொள்ளு ஆகியவற்றை பயிர் செய்து ஆடுகளுக்கு வேண்டிய தீவனப் பயிர்களை உருவாக்க வேண்டும்.
தீவனப் பயிர்கள் அதிகமாக விளையும் தருணங்களில் பயிர் செய்து பதப்படுத்தி, அதை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். மேலும், ஆள்கள் பற்றாக்குறையைப் போக்க பகுதிநேரக் கொட்டகை முறையில் ஆடுகளை வளர்க்கலாம்.
தட்பவெப்பநிலை மாற்றம், தீவன மேலாண்மை மாற்றம், சந்தையில் புதிதாக வாங்கிய ஆடுகளை உடனடியாக மந்தையில் சேர்ப்பது, தொற்று நோய் கண்ட ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது மற்ற ஆடுகளுடன் சேர்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். புதிதாக வாங்கிய ஆடுகளை 30 முதல் 45 நாள்களுக்குத் தனித்து வைத்திருந்தே மந்தையில் சேர்க்க வேண்டும். முக்கிய நோய்களுக்கு உண்டான தடுப்பூசிகளை உரிய காலங்களில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட வேண்டும்.
குட்டிகளைத் தாக்கக் கூடிய ரத்தக் கழிச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களுக்குத் தடுப்பு, சரியானப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதால் குட்டிகளின் இறப்பைத் தடுக்கலாம். ஆடு வளர்ப்போர், இதர கால்நடைகள் வளர்ப்போர் தக்க அறிவுரைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமான கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண் அறிவியல் நிலையங்கள், விவசாயப் பயிற்சி மையங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலுள்ள தொழில்நுட்ப நிபுணர்களை அணுகி தகுந்த ஆலோசனைகள் பெறலாம் என்றனர் அவர்கள்.

thanks to dinamani

Friday, July 26, 2013

நிலக்கடலை மகசூலுக்கு உதவும் விதைப்பண்ணை

தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் விதைப்பண்ணை அமைத்தால் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழையை பயன்படுத்தி மானாவாரியாக ஆனி, ஆடிப் பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் எண்ணெய் வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை வேளாண்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.
நிலக்கடலையில் டி.எம்.வி.7, டிஎம்வி 13, ஜேஎல் 24 மற்றும் நீஆர்ஐ ஆகிய உயர் விளைச்சல் ரகங்களை இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.
ஓர் ஏக்கருக்கு 80 கிலோ விதை தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீ. மற்றும் 10 செ.மீ. இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
விரிவாக்க மையங்களில் விதை: ஒரே மாதிரியான பொறுக்கு விதைகளைப் பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும்.
இதனால், நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.
அதிக மகசூலுக்கு...: ஏக்கருக்கு 5.0 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரம், 4:4:18 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரவல்ல 10 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ மூயுரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது அடியுரமாக இட வேண்டும்.
விதைகள் மூலம் பரவும் பூஞ்சான் நோயைத் தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோ டெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சுடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டைசிம் கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து விதைப்பதற்கு முன் ஓர் ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோயியம் 2 பாக்கெட், பாஸ்போபேக்டரியா 2 பாக்கெட்டை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயர் உர விதை நேர்த்திச் செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையைப் போக்க: வேளாண் துறையால் பரிந்துரைக்கப்படும் நிலக்கடலை நுண்ணூட்டச் சத்து 5 கிலோவை 20 கிலோ மண்ணுடன் கலந்து விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.
விதைத்த 40-45ஆவது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மண்ணைக் கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும்.
ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்துக் கொண்ட திரட்சியான காய்கள் அதிகளவில் உருவாக உதவுகிறது.
மேலும், நிலக்கடலைப் பயிரில் சுருள் பூச்சி, சிவப்பு கம்பளி புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் பயிர் பாதுகாப்பு முறைகளை செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையுடன் பிரீமியம், உற்பத்தி மானியம் கூடுதலாக கிடைப்பதால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. 2013-14ஆம் நிகழாண்டில் தருமபுரி மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் 222 ஹெக்டேரில் விதைப்பண்ணை அமைத்து 189 மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி விதை அலுவலரை அணுகி கரு, ஆதார நிலை நிலக்கடலை விதைகளை பெற்று அனைத்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இரண்டு மடங்கு மகசூலும், தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கி அதிக விலைப் பெற்று மூன்று மடங்கு வருமானம் பெறலாம் என்றார் வெ.கிருஷ்ணன்.

thanks to dinamani

எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

தமிழகத்தில் பயிரிடப்படும் எண்ணெய் வித்துப்பயிர்களில் எள் முக்கியமானது. எள் ”எண்ணெய் வித்துக்களின் அரசி” என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் 0.74 லட்சம் எக்டரில் எள் சாகுபடி செய்யப்பட்டு 0.32 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 433 கிலோ மட்டும் விளைச்சலாக எடுக்கப்படுகிறது. இப்பயிர் பெரும்பாலும் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுவதும், வளம் குறைந்த நிலப்பகுதிகளில் தேவையான பயிர் மேலாண்மையின்றியும் சாகுபடி செய்யப்படுவதால் எள் விளைச்சல் தமிழகத்தில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைகிறது.  எள்ளுக்கு நிலவும் சந்தை வாய்ப்பை பயன்படுத்தி எள் உற்பத்தியை அதிகப்படுத்தினால் எள் சாகுபடியை அதிக லாபத்துடன் செய்ய முடியும்.

எள் பயிரிட நிலம் தயாரித்தலுக்கு மணற்பாங்கான வண்டல் மண், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை  டிராக்டர் கலப்பை, இரும்பு கலப்பை, நாட்டுக்கலப்பை உழ வேண்டும். சிறுவிதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக்கலப்பையை கொண்டு உழ வேண்டும். பின் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்கழிவு போட வேண்டும். இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் நிலத்தின் சரிவை பொறுத்து 10 சதுரமீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு படுக்கையை  சமன்படுத்த வேண்டும். இரண்டு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பெண்டாசிம் மருந்தை கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இதை பூஞ்சாணக்கொல்லியுடன் கலக்கக் கூடாது.
  
ஐந்து கிலோ விதையுடன் 20 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராக தூவ வேண்டும்.

விதைத்த 15-ம் நாள் செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளி விட்டு செடிகளை கலைத்துவிட வேண்டும். பின் 30-ஆம் நாள் செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளி விட்டு மீண்டும் ஒருமுறை கலைத்து விட வேண்டும். மக்கிய தொழு உரம் கடைசி உழவி்ற்கு முன்பு இட வேண்டும். மண்பரிசோதனை அடிப்படையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தை இட வேண்டும். களைக்கொல்லி இட்டபின் 30-35 வது நாளில் ஒரு களை எடுப்பது அவசியம். களைக்கொல்லி இடாவிட்டால் விதைத்த 15—ம் நாட்கள் கழித்து ஒரு கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொறுத்து 5 அல்லது 6 முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். பூ பூக்கும் பருவம், காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். எள்ளைக் காய்த்துளைப்பான், எள் காய் ஈ போன்ற பூச்சிகளும், சேமிப்பில் அரிசிக்கூண் வண்டு, அரிசி அந்துப்பூச்சி போன்றவையும் தாக்கும். அதே போல், சாம்பல் நோய், ஆல்டர் நேரியா, இலைக்கருகல் நோய், செர்க்கோஸ்போரா புள்ளி நோய், வேரழுகல் நோய் போன்றவை தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.  

எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறை

எலுமிச்சை பயிரைத் தாக்கும் நோய்களின் பிசின் வடிதல் நோய் எனப்படும் பைடடோப்தோரா, போராசிடிகா, பி.பளமிவோரா, பி.சைட்ரோதாரா நோய், கரணை நோய் எனப்படும் எல்சினோ பசெட்டி, சொறிநோய் எனப்படும் ஸ்சண்தோமோனஸ் கேம்பஸ்ட்ரைஸ் பிவி சிட்ரை நோய், தண்டு நலிவு நோய் அல்லது விரைவு நலிவு நோய் எனப்படும் டிரைடிசா நச்சுயிரி, தோலுரிநோய் எனப்படும் நச்சு நோய், பச்சையாதல் எனப்படும் லிபிரோபெக்டர் ஏசியாடிகம் நோய் போன்றவை முக்கியமானது ஆகும்.


பிசின் வடிதல் நோய் தாக்கியதன் முதல் அறிகுறியாக மரப்பட்டையில் கரும் கறையா தோன்றி பிபின்பு மரக்கட்டை வரை இந்நோய் பரவும். மரப்பட்டையின் அடிப்புரத்தில் இந்நோய் பரவி கம்பி வளையம் போல் தோன்றி மரத்தையே அழித்துவிடும். மரப்பட்டைகளின் சில பகுதிகள் வறண்டும், சுருங்கி, வெடித்தும் மற்றும் சிறுசிறு  துண்டுகளாக காணப்படும். இதன் விளைவுகள் அதிகரித்து தண்டுபகுதியில் உள்ள மரப்பட்டையிலிருந்து பிசின் வடிவதைக் காணலாம். இதன் பாதிப்பு, வேரின் நுனிவரை பாயும். இந்நோய் தாக்காதவாறு நுனி வேர்கள் அல்லது அடி தண்டை தீங்கு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டையை போர்டியாக்ஸ் பசையினை தடவ வேண்டும்.
கரணை நோய் பயிரின் இலைகள், குச்சிகள் போன்றவற்றை தாக்கும்.. மழைக்காலங்களில் எலுமிச்சையை இந்நோய் தாக்கும். இந்நோய் முதலில் இளஞ்சிவப்பு புள்ளியாகக் காணப்படும். இலை திசுக்கள் உருக்குலைந்து, புண் போன்று காணப்படும். இவ்வாறு நோயினால் தாக்கப்பட்டு  உருக்குலைந்த இலைகளின் திசுக்கள் மேலும் தழும்பு போன்ற நிலத்தில் தோன்றி பின் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். பொதுவாக இலையின் அடிப்புறத்தில் புள்ளி போன்று காணப்படும். இப்புள்ளிகள் இலையில் ஊடுருவி இருபுறமும் காணப்படும். பழங்களில் சொறி அல்லது பொடி போன்று காணப்படும். முதிராத பழங்கள் பால் போன்ற நிறத்திலும் மற்றும் முதிர்ந்த பழங்கள் பச்சை நிறத்திலும் காணப்படும். இப்பழங்களில் பிஞ்சு நிலையிலும் உதிர்ந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

சொறி நோயினை ஏற்படுத்தும் பேக்டீரிய இலைத்துளைகள் மூலமாகவோ பூச்சி மற்றும் காற்றில் அசையும் முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ ஊண் ஊட்டும் தாவரத்திற்குள் நுழைகிறது. இவை இலையின் உயிரணுக்களுக்கிடையேயுள்ள இடங்களில் இனப்பெருக்கமடைந்து திசுவரையிலுள்ள நடுச்சுவர் பகுதியை அழித்து விடுகின்றன. இவை இலையின் புறணிப்பகுதியில் நிலையாகின்றன. இவ்விடத்தில் சொறி போன்ற வளர்ச்சி ஏற்பட்டு  பேக்டீரியா அதிகளவில் உற்பத்தி செய்யபடுகின்றன. இந்நோய் 20 முதல் 350 சென்டிகிரேடு வரை வெப்ப அளவில் நல்ல மழியுள்ள காலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. நோய் உண்டாவதற்கு இலைகளில் குறைந்தது 20 நிமிடங்களுக்குள் ஈரம் இருக்க வேண்டும். இந்நோயைக் கட்டுப்படுத்த நோயுற்று, கீழே விழுந்து கிடக்கும் இலைகள் மற்றும் தீக்குச்சிகள் முதலியவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும். நோயில்லாத மரத்திலிருந்தே கன்றுகள் தயார் செய்ய பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு முன் கன்றுகள் உள்ள இடத்தில் இலைகள் நன்றாக நனையுமாறு தகுந்த மருந்தை தெளிக்க வேண்டும். பழத்தோட்டங்களில் நோயுற்ற மரங்களில் நோயுற்ற சிறுகுச்சிகளை வெட்டிய பின்னர்  தகுந்த மருந்துகளைத் தெளிக்க வேண்டும். மரம் துளிர்ந்துவிடும் ஒவ்வொரு சமயமும் மரத்தின் பகுதிகள் அனைத்தும் நன்றாக நனையுமாறு மருந்து தெளித்த மிகவும் அவசியம். மரங்களை செழிப்பான தன்மையுடன் வைத்திருக்க நன்கு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எலுமிச்சையில் தோன்றும் இலை துளைப்பான்கள் இநோயை பரப்புவதால் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தண்டுநலிவு நோய் எலுமிச்சை நாற்றுகளை எளிதில் தாக்கும். இந்நோய் தாக்கும் பயிரின் வேர்ப்பகுதி அழுகி, கிளைகள் அழிந்துவிடும். பழங்கள் குறைந்து செடி மட்டும் எலும்புக்கூடு போல் காணப்படும். எலுமிச்சை இலைகளில் அதிகளவில் நரம்புப்புள்ளி காணப்படும். மரத்தின் வளர்ச்சி குறைந்து விடும். பழசாகுபடி குறைந்து பழங்களின் அளவு சிறியதாக இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

பச்சையாதல் நோய் தாக்கிய பயிர்கள், அனைத்து வகையான எலுமிச்சைகளில் வேர்பகுதிகளில் காணப்படும். இலையின் வளர்ச்சி குறைதல், குறைந்த அளவிலான இலைகள், குச்சிகள் அழிதல், பாதிக்கப்பட்ட பயிர்கள் பச்சையாதல் போன்றவற்றை இந்நோய் தாக்கும் பயிரின் அறிகுறிகளாகும். இவற்றைக்கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். நுண்ணுயிரி போன்ற நோய்கள் தாக்காத கன்றுகளைப் பயன்படுத்தலாம்.



நேந்திரன் வாழை உற்பத்தி

கடந்த 2011-ம் ஆண்டு உலகளவில்  5.15 மில்லியன் எக்டர் பரப்பிலிருந்து 106.54 மில்லியன் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் சராசரி உற்பத்தித்திறன் ஒரு எக்டேருக்கு 20.7 டன்களாகும். கடந்த உற்பத்தியில் இந்தியா 27.8 சதவீதம் பங்களித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வாழையின் பரப்பு மற்றும் உற்பத்தி முறை கணிசமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி 188.87 லட்சம் டன்னிலிருந்து 296.67 லட்சம் டன்களாகவும்  மற்றும் உற்பத்தித்திறன் ஒரு எக்டருக்கு 33.1 டன்னிலிருந்து 36.3 டன்களாகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் தமிழகம் வாழை உற்பத்தியில்  முன்னனியில் உள்ளது. கடந்த 2011-12 ல் 82.53 லட்சம் டன் வாழை உற்பத்தியில் தமிழகம் (26.47 சதவீதம்), மகாராஷ்டிரா (52.5 டன்/எக்டர்) உள்ளது. தமிழகத்தில் பயிரிடப்பப்படும் முக்கிய வாழை ரகங்களில் நேந்திரம் முக்கியமானதாகும். கோவை, ஈரோடு, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேந்திரம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நேந்திரன் முக்கியமாக சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.  நேந்திரன் ஒரு தாருக்கு சராசரி 8 முதல் 12 கிலோ வரை எடை கூடியுள்ளது. ஏப்ரல்-மே  மற்றும் அக்டோபர் – நவம்பர் ஆகிய மாதங்களில் நேந்திரன் நடவு செய்யப்படுகிறது. இந்த ரகம் காற்று சேதத்தை தாங்கி வளர்வதால் உயர் அடர்த்தி நடவு முறை பின்பற்றப்படுகிறது.

அதிகமான வரத்துகள் ஜனவரி-பிப்ரவரியிலும் மற்றும் குறைந்த வரத்துகள் ஜூலை-ஆகஸ்ட்டிலும் வருகின்றன. தற்போது சந்தைவிலை கிலோ ஒன்றுக்கு ரூ.32 ஆகும். இவ்விலை தரம் மற்றும் இதர பண்புகளை பொறுத்து மாறுபடும். வரும் மாதங்களில் அறுவடை விலைகளை பற்றி விவசாயிகள் விழிப்புடன் செயல்பட்ட வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையமானது. கோவையில் இயங்கிவரும் உழவர் சந்தையில் கடந்த 10 வருடங்களாக நிலவிய நேந்திரன் விலைகளை ஆராய்ந்தது.

கோவை உழவர் சந்தையில் 2013 ஆகஸ்டு மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ 31 முதல் 33 வரை கிடைக்கும். 2013 செப்டம்பரில் கிலோ ஒன்றுக்கு ரூ.33 முதல் 35 வயது வரை இருக்கும். விவசாயிகள் முகவர் மூலம் விற்கும்போது விலை முன்னறிவிப்புகளை விட கிலோ ஒன்றுக்கு குறைவாகவே கிடைக்கும். இவ்வாறு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மண்வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம் ஆட்டுக்கிடாய் வளர்ப்பு

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்புவரை வேளாண்மையில் மண்வள மேம்பாட்டிற்கும் , பயிர் விளைச்சலுக்கும் பண்ணைக்கழிவுகள், கால்நடைக்கழிவுகளே இயற்கை உரங்களாக அதிக விளைச்சலை கொடுக்கும் பயிர் ரகங்களுக்கு ஏற்ப ரசாயன உரங்கள் கண்டறியப்பட்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அங்ககக் கழிவுகளை இயற்கை உரங்களை பயன்படுத்துவது பெரிய அளவில்  பயன்படுத்தப்பட்டுகிறது. இதனால் அங்கக கழிவுகளை இயற்கை உரங்களை பயன்படுத்துவது பெரியளவில் குறைந்துவிட்டது. மண்ணில் உள்ள அங்கக பொருட்களின் அளவே மண்ணின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதுடன் , மண்ணின் அறிவியல் பண்புகளையும் நிர்ணயிக்கிறது.

தற்கால வேளாண்மையில் பாரம்பரிய முறைகளான தொழு உரம் இடுதல், ஆட்டுக்கிடை போடுதல், பசுந்தாள் உரங்கள் இடுதல் போன்றவற்றை தவிர்த்து ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெருகி வரும் மக்கள் தொக்கைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம், நம் பராம்பரிய அங்கக வேளாண்மையை கடைபிடிப்பது அவசியமாகும்.

   அந்த வகையில் நம் பாரம்பரிய தொழில்நுட்பங்களில் ஆட்டுக்கிடை போடும் முறை மண்ணின் வளத்தை சீராக மேம்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பகலில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை இரவில் வயலில் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தங்க வைப்பது ஆட்டுக்கிடையாகும். இரவில் தாங்கும் ஆடுகளின் கழிவுகளான சாணம், சிறிநீர் ஆகியவற்றை வயலில் சேகரிக்கப்படுவதே முக்கிய நோக்கமாகும்.ஆட்டுச்சாணம், சிறுநீரில் அதிகளவில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. ஆட்டுக்கிடை போடும் தொழில்நுட்பம் தென் தமிழகத்தில் பிரபலம், நெல், வாழை, கரும்பு பயிடப்படும் நஞ்சை நிலத்திலும், காய்கறி பயிரிடப்படும் தோட்டக்கால் நிலம், மானாவாரிக் கரிசல் நிலத்திலும் ஆட்டுக்கிடை போடப்படுகிறது.

தற்போதும் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஆட்டுக்கிடை முறையை பின்பற்றி வருகின்றணர். பல இடங்களில் தமிழகத்தின்  தட்பவெப்பத்திற்கு ஏற்ப செம்மறி ஆட்டு இனங்களை போடுகின்றனர். ஆட்டு எருவில் 0.9 மற்றும் 1.0 சதவீதம் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் உள்ளன.

ஆட்டுக்கிடையை போடுவதால் நிலத்தில் அங்கக பொருட்களின் அளவு அதிகரிக்கின்றது. நீர்ப்பிடிப்பு திறன், மண்ணின் நயம், மண்ணின் காற்றோட்டம், மண்ணின் அடர்வு போன்ற மண்ணின் பெளதீக தன்மைகள் மேம்படுகின்றன. உவர், களர் நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பொழுது மண்ணின் ரசாயன பண்புகள் மேம்படுத்தப்பட்டு மண்வளம் சீர்படுகின்றது.

மணற்பாங்கான நிலத்தில், மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்க வைக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண்ணில் உள்ள பல வகையான நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகமாகின்றன. வயலில் கிடை போடுவதன் மூலம் வயலுக்கு எரு ஏற்றி செல்லும் செலவு மிச்சமாகிறது. குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தேவையான அளவில் தேவையான விகிதத்தில் கிடைக்கின்றன. மேலும்,பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சத்துக்கள் அனைத்தும் பயிருக்கு உடனடியாகக் கிடைக்கின்றன. இதனால் மண்ணிற்கு எந்த கெடுதலும் இருப்பதில்லை.




சொட்டுநீர் பாசனம் மூலம் செடிமுருங்கை

காளிமுத்து, விவசாயி: தாராபுரம் தாலுகா, ஊத்துப்பாளையம் கிராமம் சர்வே எண்.78/1 மற்றும்82/2ல் எனக்கு சொந்தமான 1.61.0 ஹெக்டேர் நிலத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை தாராபுரம் அலுவலகத்தின் மூலம் அரசு மானியத்தில் (75 சதவீதம்) முருங்கை பயிருக்கு சொட்டுநீர்ப்பாசனம் அமைத்துள்ளேன். 


மிகவும் வறட்சியான நிலையில் எனக்கு சொந்தமான 600 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கம்ப்ரசர் மூலம் சுமார் 4 மணி நேரம் தண்ணீரை எனக்கு சொந்தமான திறந்தவெளி கிணற்றில் சேமித்து, கிணற்றிலுள்ள 5எச்.பி. மோட்டார் மூலம் சேமிக்கப்பட்ட நீரைக்கொண்டு சுமார் 2 மணி நேரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் முருங்கை பயிருக்கு ஒரே நேரத்தில் 1.61.0 ஹெக்டேர் பரப்புக்கு பாசனம் செய்து சுமார் 4000 முருங்கை மரங்களை இந்த வறட்சியான காலத்திலும் நல்ல முறையில் பயிர் செய்து வருகிறேன். 



வாய்க்கால் பாசனம் மூலம் சுமார் 1 ஏக்கர் மட்டுமே பாயும் என்ற நிலையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 4.00 ஏக்கர் முருங்கை பயிரிட்டு நல்ல முறையில் பாசனம் செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு ஆண்டுக்கு சுமார் 40.00 டன் வகை மகசூல் கிடைக்கும் என்பதால் எனக்கு கூடுதலாக ரூ.3.00 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் எனவும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் இது சாத்தியமாகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


நன்றி தினமலர்

முந்திரியில் அதிக விளைச்சல் பெற

பொதுவாக முந்திரி 7து7 மீட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு 80 கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. புதிய தொழில்நுட்பமான அடர்நடவு முறையில் 5து4 மீட்டர் இடைவெளியில் 200 கன்றுகள் நடலாம். இவ்விரு முறைகளிலும் கிளைகளை கவாத்துசெய்தல் முக்கியம். நோய்வாய்ப்பட்ட கிளைகள், குறுக்கும் நெடுக்குமான கிளைகள் நீர்போத்துக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.


கவாத்து: ஆகஸ்ட் மாதம் வரும் பூந்தளிர்களில் இருந்து டிசம்பர் மாதம் பூக்கள் மலரும். முந்திரி காய்ப்பு முடிந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மூன்றாமடுக்கு கிளைகளை கவாத்து செய்துவிட வேண்டும். வெட்டுப்பட்ட காயங்களில் போர்டோ பசை அல்லது பைட்டலான் மருந்தைச் சுண்ணாம்பு பதத்தில் பூசிவிட வேண்டும்.



உரமிடுதல்: ஒரு மரத்திற்கு 1000:125:250 கிராம் தழை, மணி, சாம்பல் சத்து கலவையை 5 மற்றும் அதற்கு மேல் வயதுடைய மரங்களுக்கு மழை நாட்களில் அடியுரமாக கொடுக்க வேண்டும். சிறிய மரங்களுக்கு வயதுக்கு தகுந்தபடி உர அளவைக் குறைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஒரு வயது உரப்பரிந்துரையில் 5ல் ஒரு பகுதி 2 வயது, 5ல் 2 பகுதி என்பதுபோல் கணக்கிடவேண்டும்.


கவாத்துசெய்து 30 அல்லது 45 நாட்களுக்குள் புதிய இலைகளும் புதுத் தளிர்களும் நன்கு வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு மேலுரத் தெளிப்பு கொடுக்க வேண்டும். தழை, மணி, சாம்பல்சத்து 19:19:19 கலவையை (1 சதம்) மேலுரமாக தெளிக்க வேண்டும்.


இரண்டாம் மேலுரத் தெளிப்பு: பெரும்பாலான ரகங்களும் விதைக்கன்றுகளும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பூக்க தொடங்கும் வி.ஆர்.ஐ.3ரகம் டிசம்பர் முதல் வாரத்திலேயே பூக்கத் தொடங்கிவிடும். வீரிய ஒட்டு ரகமான வி.ஆர்.ஐ. (முந்திரி) எச்.1, டிசம்பர் கடைசி வாரம் பூக்கத் தொடங்கும். பூங்கொத்துக்கள் தோன்றியவுடன் இரண்டாம் தெளிப்பாக மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஒரு சத மேலுரக் கலவையை போரான் நுண்ணூட்டச் சத்துடன் (0.1%) கலந்து தெளிக்க வேண்டும். இந்த பருவத்தில் தேயிலைக்கொசு, இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படலாம். அவ்வாறு இருந்தால் புரோபனோபாஸ் மருந்தை 0.1 சதம் கலந்து தெளிக்கலாம்.



மூன்றாம் மேலுரத் தெளிப்பு: முந்திரியில் மண், மரத்திலுள்ள சத்துக்களைப் பொறுத்தே பூ, காய் பிடிப்புத்திறன் வேறுபடுகிறது. முந்திரி ஒரு மானாவாரிப்பயிராக இருப்பினும் அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடிய பயிராக இருப்பினும் சரியான நீர்ப்பாசனமும் உர நிர்வாகமும் செய்யப்பட்ட தோப்பில் அதிகமான விளைச்சலைத் தரக்கூடியது.எனவே காய்பிடிப்பு தொடங்கியவுடன் த.வே.ப.கழக பஞ்சகாவியம் கரைசலை (3 சதம்) மேலுரமாகத் தெளிப்பது நல்லது. இது ஒரு பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.



இவ்வாறு முந்திரி மரங்களை நட்ட 6 மாதம் முதலே கவாத்து முறைகளைச் சரியாகக் கையாள்வதால் புதிய பூக்கும் கிளைகளை உந்தமுடியும். மேலுரத் தெளிப்பான் மருந்துகளைத் தெளிப்பதன் மூலம் பூக்கும் திறன், காய்பிடிப்புத்திறன், முந்திரிக்கொட்டை வளர்ச்சி, விளைச்சல், பருப்பின் தரம் ஆகியவற்றை அதிகரிக்கலாம். இந்த கவாத்து, மேலுரத் தெளிப்பு தொழில்நுட்பத்தின்மூலம் 30 முதல் 40 சதம் அதிக விளைச்சலைப் பெறலாம். ஏக்கருக்கு 11,000 ரூபாய் கூடுதல் வருமானமும் கிடைக்கும். (தகவல்: முனைவர் எம்.எஸ்.அனீசாராணி, எஸ்.ஜீவா, ரா.கீ.புருஷோத்தமன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டலஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம்-606 001, கூடலூர் மாவட்டம். 04143-238 231)


நன்றி தினமலர்

ஆடாதோடா - உயிர்வேலி

ஆடாதோடா மூலிகையானது அகாந்தேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் ஜஸ்டிசியா ஆடாதோடா என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது. 4 மீட்டர் வரை வளரக்கூடியது. ஆடாதோடா முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாச நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுகிறது. இத்தாவரத்தில் காணப்படும் வாசிசின் என்ற மருந்துப் பொருளே இதன் மருத்துவ குணத்துக்கு காரணமாக விளங்குகிறது. இலைப்பகுதியிலே அதிகம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திலும் காணப்படுகிறது. வீடுகளில் அழகு செடியாகவும் வளர்க்கலாம். இலைகள் கசப்புத்தன்மை கொண்டவை. இதனை வெல்லத்துடன் கலந்து கசாயமாக்கி அருந்துவதால் மூச்சுத்திணறல் குணமாகும். வீட்டுத்தோட்டம் மற்றும் வயல்களில் உயிர்வேலியாக நடலாம்.

உயிர் வேலியாய் அமைப்பதன் பயன்கள்:
1. இதனுடைய இலை, தண்டு, வேர் முதலியன மருத்துவ குணம் கொண்டது. கால்நடைகள் இதனை உண்ணாது.
2. இது நீண்ட இலைகளையும் நன்கு அடர்த்தியாகவும், எப்போதும் பசுமையாகவும் வளர்ந்து சிறந்த வேலியாக பயன்படுகிறது.
3. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
4. எல்லா வகை காலநிலை மற்றும் மண்ணில் வளரக்கூடியது.
5. இதனுடைய காய்ந்த இலை மூலிகை கம்பெனிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் சந்தைப்படுத்துதல் எளிது.
6. இத்தாவர இனப்பெருக்கம் தண்டினை வெட்டி நடுவதன் மூலம் எளிய முறையிலே வளர்க்கலாம்.

ஜம்மு பகுதியில் ஆடாதோடாவானது பழங்களை பழுக்க வைக்க பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் நெல் வயலில் ஆடாதோடா இலையும் மண்ணோடு கலந்து உழப்படுகிறது. இதனால் மண் வளம் பெருகி, பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. கேரளாவில் தென்னையில் ஊடுபயிராகவும் உயிர்வேலியாகவும் பயிரிட வேளாண்மை துறையினரால் பரிந்துரைக்கப்படுகிறது.

சாகுபடி: ஆடாதோடாவின் முதிர்ந்த தண்டானது 15-20 செ.மீ. அளவுக்கு நறுக்கப்பட வேண்டும். அதில் 3-4 கணுக்கள் இருக்க வேண்டும். வெட்டப்பட்ட தண்டானது குப்பை மற்றும் மண் கலந்த பாலிதீன் பைகளில் நடவேண்டும்.

2 மாதங்களுக்கு பின் பாலிதீன் பைகளில் இருந்து பிரிக்கப்பட்டு தரையில் நடலாம். தொழு உரம் அவசியம். ஆரம்ப காலங்களில் நீர் பாய்ச்சுவதும், களை நீக்குவதும் அவசியமாகும். மழைக்காலத்தில் இலைப்புள்ளி நோய் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்நேரத்தில் பாதிக்கப்பட்ட இலைகளை நீக்குவதன் மூலமாகவோ அல்லது 1% போரடியாக்ஸ் கலவையை தெளிப்பதன் மூலமாகவோ நீக்கலாம்.

அறுவடை: நட்ட 6 மாதத்தில் இலைகளை அறுவடை செய்யலாம். வேரானது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பே அறுவடை செய்யப்பட வேண்டும். இலைகளை கைகளைக் கொண்டு ஒவ்வொன்றாகப் பறிக்க வேண்டும். உருவக் கூடாது.

ஆகஸ்ட்-அக்டோபர் மாதங்களில் இலைகளில் அதிக மருந்துச்சத்து கண்டறியப்பட்டுள்ளதால் அறுவடைக்கு அதுவே சிறந்த காலமாகும். அறுவடை செய்யப்பட்ட இலைகளை 2-3 நாட்களுக்கு நிழலில் நன்கு காயவைக்க வேண்டும். காய்ந்த இலைகளில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் இருக்க வேண்டும். காய்ந்த இலைக்காம்புகள் அனுமதிக்கப்படுகிறது. முற்றிய தண்டுப்பகுதிகள் நீக்கப்பட வேண்டும்.

இன்று எல்லா மூலிகைகம்பெனிகளுக்கும் ஆடாதோடா தேவை என்பதால் இதனை பயிரிடுவது வருமானம் தருவதாக அமையும். மேலும் நிலைத்த அறுவடை பின்பற்றப்பட வேண்டும். ஆடாதோடா இனமானது அழியும் தருவாயில் உள்ளதால் முடிந்தளவு வேரோடு அறுவடை செய் வதைத் தவிர்க்க வேண்டும்.
என்.கணபதிசாமி, 

நன்றி தினமலர்

Sunday, July 21, 2013

முந்திரி அதிக விளைச்சல் பெறும் முறை

முந்திரி மரம் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. முந்திரி பெரிய மரங்களாக படர்ந்து வளரும் மர இனமாகும் புதிய ரகங்களும், ஒட்டுக்கன்றுகளும் படர்வு குறைவாக இருக்கும். முந்திரி 7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த இடைவெளி முறையில் ஏக்கருக்கு 80 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கலாம். புதிய தொழில்நுட்பமான அடர்நடவு முறையில் 5 பை 4 மீட்டர் இடைவெளியில் அதிகளவு ஏக்கருக்கு 200 கன்றுகளை வைத்து பராமரிக்கலாம். இவ்விருமுறைகளிலும் குறுகிய இடைவெளியில் அதிகளவு மரங்களை பராமரிக்கும் பொழுது கிளைகளை கவாத்து செய்தல் அவசியம்.நோய்வாய்ப்பட்ட கிளைகள், குறுக்கும் நெடுக்குமான கிளைகள், நீர்போத்துகள் ஆகியவற்றை நீக்குவதால் சூரியஒளி உட்புகுந்து நல்ல காற்றோட்டமும், சீரான வளர்ச்சியும் மரங்களுக்கு கிடைக்கும்.முந்திரி மரங்கள் புதிய கிளைகளில் பூத்து காய்க்கும். ஆகஸ்டு மாதம் வரும் புதுதளிர்களில் இருந்து டிசம்பர் மாதம் பூக்கள் மலரும். முந்திரி காய்த்து முடிந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மூன்றாமடுக்கு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். 

 வெட்டுப்பட்ட காயங்களில் போர்டோபசை அல்லது பைட்டலான் மருந்தை சுண்ணாம்பு பதத்தில் கலந்து பூச வேண்டும். இது பின்கருகல் நோயிலிருந்து மரங்களை பாதுகாக்கும். மேம்படுத்தப்பட்ட உரப்பரிந்துரையான ஒரு மரத்திற்கு 1000:125:250 கிராம் அளவு கொண்ட தழை, மணி, சாம்பல் சத்துக் கலவையை அடியுரமாக கொடுக்க வேண்டும். சிறிய மரங்களுக்கு  வயதுக்கு தகுந்தபடி உர அளவைக் குறைத்து கொள்ளுதல் வேண்டும். ஒருவயது உரப்பரிந்துரையில் ஐந்தில் ஒருபகுதி, 2 வயது 5-ல் இரண்டு பகுதி என்பது போல் கணக்கிட வேண்டும்.
   
  முதல் மேலுர தெளிப்பில் கவாத்து செய்து 30 அல்லது 45 நாட்களுக்குள் புதிய கிளைகளும், புதுத்தளிர்களும் நன்கு வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு மேலுரத்தெளிப்பு கொடுக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து 19:19:19 கலவையை மேலுரமாக தெளிக்க வேண்டும்.
  
  இரண்டாம் மேலுர தெளிப்பின் போது முந்திரியின் பூக்கும் தன்மை ரகங்களை சார்ந்து வேறுபடும். பெரும்பாலான ரகங்களும், விதைக்கன்றுகளும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும். தமிழகத்தில் பிரபலமான ரகமான விஆர்ஐ 3 மட்டும் டிசம்பர் முதல் வாரத்திலேயே பூக்கத் தொடங்கும். புதிய வீரிய ஒட்டுரகமான விஆர்ஐ(முந்திரி) எச்1 டிசம்பர் கடைசிவாரம் பூக்கத் தொடங்கும். பூங்கொத்துகள்  தோன்றியவுடன் இரண்டாம் தெளிப்பாக  மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஒரு சத மேலுரக்கலவையை போரான் கலந்து தெளிக்க வேண்டும். இந்த பருவத்தில் தேயிலை கொசு, இலைச்சுருட்டு புழு தாக்குதல் அதிகம் காணப்படலாம்.

  மூன்றாம் மேலுரத் தெளிப்பின் போது முந்திரியில் மண், மரத்திலுள்ள சத்துக்களை பொறுத்தே பூ, காய்பிடிப்பு திறன் வேறுபடுகின்றது.முந்திரி ஒரு மானாவாரி பயிராக இருப்பினும் அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடிய பயிராக இருப்பினும் அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடிய பயிராக இருப்பினும் சரியான நீர்ப்பாசனமும், உர நிர்வாகமும் செய்யப்பட்ட தோப்பில் அதிகமான விளைச்சலை தரக்கூடியது.
  எனவே, காய்ப்பிடிப்பு தொடங்கியவுடன் வேளாண் பல்கலையின் த.வே.ப.க பஞ்சகாவியக் கரைசலை மேலுரமாக தெளிப்பது நல்லது.இவ்வாறு முந்திரி மரங்களை தெளிப்பதன் மூலம் பூக்கும் திறன் , காய்க்கும் திறன், முந்திரிக்கொட்டை வளர்ச்சி, விளைச்சல்,பருப்பின் தரம் ஆகியவற்றை அதிகரிக்கலாம். இந்த கவாத்து, மேலுரத் தெளிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் 30 முதல் 40 சதவீதம் அதிக விளைச்சலை பெறலாம்.

குளிர்காலத்தில் பீட்ரூட் சாகுபடி

மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாகக் கொண்ட பீட்ரூட் உலகின் பல பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் ஒரு குளிர்பிரதேச வேர் காய்கறியாகும். பீட்ரூட்டை வேக வைத்தும், வேக வைக்காமல் பச்சையாக உண்ணவும் மற்றும் ஊறுகாய் போடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைப்பகுதியை கீரையாகவும் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் தண்ணீர்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் கிரிம்சன், குளோப், டெட்ராய்ட், டார்க்ரெட்,ரெட்பால் மற்றும் ஊட்டி1 என்ற ரகங்கள் அதிகமாக பயிர் செய்யப்படுகுன்றன.

 
பீட்ரூட் சாகுபடி செய்ய கடினவகை நிலத்தை தவிர்க்க வேண்டும். மிகவும் குறைந்த வெப்பநிலையை தாங்காது. ஆகையால் 10 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெப்பநிலை இருக்குமாறு சாகுபடி செய்ய வேண்டும். மண்ணில் கார அமிலத்தன்மை 6-7 ஆக இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வருடம் முழுவதும் , தரைப்பகுதியில் குளிர் காலங்களிலும் சாகுபடி செய்யலாம்.

   ஒரு எக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகிறது. நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி, உயரப்பாத்திகள் 30 செ.மீ இடைவெளியில் தயார் செய்ய வேண்டும். ஒரு எக்டர் நிலத்திற்கு 20 டன் தொழு எருவும், 60 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும் மற்றும் 100 கிலோ சாம்பல் சத்தும் அடியுரமாக இட வேண்டும். பின்பு நட்ட 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து மேலுரமாக இட வேண்டும். விதை ஊன்றியவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியம். பின்பு 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை  தண்ணீர் விடுதல் வேண்டும்.

  நடவு செய்த 20 நாள் கழித்து பயிர் கலப்பு செய்தல் வேண்டும். பின்னர் களைகளை எடுத்து மண் அணைக்க வேண்டும். பொதுவாக வேர் அழுகல்நோயும், இலைப்புள்ளி நோயும் தாக்கும்.வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 கிராம் பைட்டலாம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த  2 கிராம் இண்டோபில் எம் 45 மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


   நடவுக்குபின் 120 நாள் கழித்து பீட்ரூட் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்யும் போது நிலம் மிதமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். பருவமழை பொழியும் இந்த குளிர்காலத்தில் முறையாக விதைநேர்த்தி செய்தால் ஒரு எக்டேர் நிலத்தில் 20 முதல் 25 டன் வரை பீட்ரூட் மகசூல் கிடைக்கும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து குளிர்காலமாக இருப்பதால் தரைப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி ஏற்றதாக உள்ளது என வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Friday, July 19, 2013

வெண்டையில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த..

வெண்டையில் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வெண்டையில் மாவுப்பூச்சியானது தற்போது அதிகளவில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்து வகையான பயிர்கள் மற்றும் களைச் செடிகளிலும் வாழும் தன்மை கொண்டவை.

பூச்சிகளின் மீது காணப்படும் வெண்மையான மெழுகு பூச்சு, குறுகிய காலத்தில் அதிக இனப் பெருக்கம் செய்யும் திறன், மாறிவரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அதிக நாள்கள் உயிர் வாழும் தன்மை, அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்து உபயோகித்தல், இரண்டிற்கு அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளின் கலவைகளைப் பயன்படுத்துதல், பூச்சிகளின் மறு உற்பத்தித்

திறனை அதிகப்படுத்தக்கூடிய செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை பயன்படுத்துதல் போன்றவையே இப் பூச்சி அதிகளவில் பரவுவதற்கான காரணங்களாகும்.

இப் பூச்சிகள் வெண்டை தவிர பருத்தி, செம்பருத்தி, சூரியகாந்தி, கத்தரி, தக்காளி, பார்த்தீனியம், துத்தி, சாரணை, குரோட்டனஸ் போன்ற செடிகளையும் தாக்குகிறது. இவை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு காற்று, எறும்புகள், களைகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுகின்றன.

இப் பூச்சியானது தொடர்ச்சியான வறண்ட சூழ்நிலையில் அதிகளவு இனப்பெருக்கம் செய்து பரவும் தன்மை கொண்டது.

சேத அறிகுறிகள்:இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலையின் அடிப்பகுதி, தண்டு மற்றும் காயப் பகுதிகளில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகள் சுருண்டும், மஞ்சள் நிறமாக மாறியும் பின்னர் உதிர்ந்து விடுகின்றன. இவை பஞ்சு போன்ற வெண்மையான திட்டு திட்டாக செடிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

மாவுப் பூச்சியானது தேன் போன்ற கழிவுப் பொருளை வெளியேற்றுவதால் அவற்றை உண்பதற்கு எறும்புகள் அதிகளவில் வருகின்றன. இந்தக் கழிவுப் பொருள்கள் இலைகள் மற்றும் காய்களில் படிவதால் கரும்பூஞ்சாணம் படர்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது. மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் போது செடி முழுவதும் காய்ந்து பின்னர் இறந்து விடுகின்றன.

வாழ்க்கை பருவம்: இவை ஆண் பூச்சியுடன் சேராமலேயே முட்டையிடும் திறன் பெற்றது. வளர்ந்த பூச்சியின் உடலானது நீள்வட்டமாகவும், பக்கவாட்டில் வட்ட வடிவமாகவும் காணப்படும். இப் பூச்சி பொதுவாக கரும் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், உடல் முழுவதும் பஞ்சு போன்ற வெண்மையான மெழுகுப் பூச்சினால் மூடப்பட்டிருக்கும். மேற்புற நடுவயிற்றுப் பகுதியில் கருமை நிற பகுதி தென்படும்.

மேலாண்மை முறைகள்: வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் தென்பட்ட உடனே தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச் செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். பூச்சி மற்றும் எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து உடனடியாக தேவையான மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

ஒட்டுண்ணிகள் மற்றும் இரைவிழுங்கிகள் அதிகமாக இருக்கும்போது பூச்சிமருந்து தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சேதம் அதிகமாக இருக்கும்போது ஒரு ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 18.5 எஸ்சி 120 மி.லி. அல்லது தயமீதாக்கம் 30 டபிள்யூடிஜி 120 கிராம் அல்லது அசிபேட் 75 எஸ்பி 400 கிராம் அல்லது புரோபனோபாஸ் 50 இசி 400 மி.லி. அல்லது குளோர் பைரிபாஸ் 20 இசி 100 மி.லி. என்ற அளவில் ஒட்டும் திரவம் 200 மி.லி. கலந்து கைத் தெளிப்பான் கொண்டு செடி முழுவதும் நன்கு நனையும் படியும், பூச்சியின் மீது படும்படியும் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை 15 நாள்கள் கழித்து பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.

ஒரே மருந்தைத் திரும்ப திரும்ப தெளிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். பூச்சிமருந்தை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கலாம் என்றார் அவர்.

thanks to dinamani

கரும்பு பயிரைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறையும்.

    தமிழகத்தில் கரும்பு சாகுபடி சராசரியாக 3.1 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 325 லட்சம் டன் கரும்பும், 24 லட்சம் டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முக்கிய தொல்லையாக இருப்பது பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் தான். பயிரைத் தாக்கும் நோய்கள், பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தியும், நோய், பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை.

  
கரும்பு பயிரை தாக்கும் நோய்களில் கரும்பின் செவ்வழுகல் நோய் எனப்படும் கொலிடோடிரைகம், பிலிகேட்டம், கரும்பின் கரணை அழுகல் நோய் எனப்படும் செரட்டோசிஸ்டிஸ் பேரடாக்சா, புற்தண்டு நோய் எனப்படும் வைரஸ், கட்டைப்பயிர் குட்டையாதல் எனப்படும் நோய் (பாக்டீரியா), கரும்பின் தேமல் நோய் எனப்படும் கரும்புத் தேமல் நச்சுயிரி ஆகியவை முக்கியமானவை ஆகும்.

   செவ்வழுகல் நோய் எனப்படும் கொலிடோடிரைகம் பில்கேட்டம் நோயின் அறிகுறிகளை கரும்பின் மேற்பாகத்திலும், உட்பாகத்திலும் காணலாம். கரும்பின் மேற்பாகத்திலும், உட்பாகத்திலும் காண்லாம். கரும்பின் மேற்பாகத்தில் நோயுற்ற கணுப்பகுதியில் நோய் பரவும். அதன் கீழேயுள்ள தோகைகள் வெளுத்து மஞ்சள் நிறமாக காணப்படும். இந்நிலையில் நோயுற்ற கரும்பின் தூர்கள் அனைத்தும் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட கணுவில் எண்ணற்ற சிறிய கருமை நிறப்பூசண வளர்ச்சியும் காணப்படும். நோயுற்ற தோகையின் நடு நரம்பில் அடர்சிவப்பு நிற ஓரத்தையும், பழுப்பு நிற மையத்தையும் கொண்டவையாக மாறிவிடும். பாதிக்கப்படாத தோகைகள் காய்ந்துவிடுவதால் ஒடிந்து தொங்குவது தென்படும். இந்நோய் தீவிரமாக தோன்றினால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிராகவும் காய்ந்துவிடும். இவற்றை கட்டுப்படுத்த, நோயினால் தாக்கப்படாத பயிரிலிருந்து பெற்ற கரணைகளை பயிரிட பயன்படுத்த வேண்டும்.நோயுற்ற கரும்பின் பகுதிகள் யாவற்றையும் தங்காமல் சேகரித்து எரிந்துவிட வேண்டும். நோய் பாதித்த அதே நிலத்தில் கரும்பை தொடர்ந்து பயிரிடுவதை தவிர்த்து நெல் போன்ற மாற்று பயிரிட  வேண்டும். நோய் தோன்றிய பின் கட்டைப்பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

    கரும்பின் கரணை அழுகல் நோய் எனப்படும்  செரட்டோசிஸ்டிஸ் பேரடாக்ஸா நோய் தாக்கிய கரணைகளை நடுவதற்கு பயன்படுத்தினால் அவை முளைக்காமல் அழுகிவிடும். அக்கரணைகள் நீளவாக்கில் பிளந்து பார்த்தால் உட்திசுக்கள் அழுகியும் செந்நிறமாக மாறிவிடும். இந்நோய் அன்னாசி பழ மணத்தை வெளிப்படுத்துவதால் இது அன்னாசிப்பழ நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோய் முளைத்த, குருத்துகளையும் தாக்குவதால் சிவந்து வெளிறிக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்படாத கரணைகளை தேர்ந்தெடுத்து நட பயன்படுத்த வேண்டும். நட்டபின் வயலில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிகால் வசதிகளை பெருக்க வேண்டும். எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயிரிடப் பயன்படுத்துதல் சிறிதே முறையாகும்.

    புற்தண்டு நோய் எனப்படும் வைரஸ் நோய் நோயுற்ற கரும்பிலிருந்து மிகுதியான அளவு தூசுகள் உண்டாகும். இக்கதிர்கள் சிறியவையாகவும், அவற்றிலுள்ள தோகைகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படும். நோயுள்ள கரும்பின் தண்டில் கணுவிடைப்பகுதி குட்டையாக இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் உள்ள மொட்டு ஊக்குவிக்கப்படுவதால் அதிகமான பக்கக்கிளைகள் தோன்றும். இளம்பயிரில் நோய் ஏற்பட்டால், வெளிறிய சிறிய இலைகளுடன் புதர் போன்று அடர்த்தியாக காணப்படும். வளர்ந்த பயிரில் நோய் தோன்றும் போது கரும்பின் மேல் பகுதியில் வெளிறிய பச்சை நிறத்துடன் கூடிய தோகைகளுடன் காணலாம்.நோயுற்ற கரும்பிலுள்ள மொட்டுக்கள் மெல்லியவையாகவும் நீண்டும் வெடித்தும் இருக்கும். இவற்றை கட்டுப்படுத்த நோய் தாக்காத கரும்பிலிருந்து தேர்ந்தெடுத்த விதைக்கரணைகளை நடுவது சிறந்த முறையாகும். நோயுற்ற கரும்பு புதர் போன்றும், உயரம் குறைவாகவும், இதனை எளிதில் அறிந்து களைந்து அழித்துவிடலாம்.

    கட்டைப்பயிர் குட்டையாதல் எனப்படும் பாக்டீரியா நோய் தாக்கிய கரும்பு வளர்ச்சி குன்றி காணப்படும். இவற்றில் தோகைகள் அதிகமாக தோன்றுவதில்லை . கணுவிடைப்பகுதி மிகவும் குட்டையாகவே இருக்கும். தூர் அதிகம் உண்டாவதில்லை. நோயுற்ற கரும்புகளின் வெளிப்படையான அறிகுறிகளிலிருந்து நோயினை எளிதில் அறிய முடியாது. இருப்பினும், நோயுற்ற கரும்புகளை பிளந்து பார்த்தால் குண்டூசித்தலை போன்று சிறு சிறு புள்ளிகளை இளஞ்சிவப்பு நிறத்தில் கணுக்களில் காணலாம். நோயுற்ற விதைக்கரணைகள், சாறு ஆகிவை மூலமாக பரவுகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த நோயில்லாத வயல்களில் உள்ள முதிர்ந்த கரும்புகளிலிருந்து எடுத்து விதைக்கரணைகளை பயன்படுத்த வேண்டும். வெட்டுக்கத்திகளை தொற்றுநீக்கிகளில் நனைத்தெடுத்த பின் மீண்டும் கரணைகளை வெட்டுவதற்கு பயன்படுத்துதல் நோய் பரவுதலை தடுக்கும்.


   கரும்பின் தேமல் நோய் எனப்படும் கரும்புத் தேமல் நச்சுயுரி நோய் தாக்கிய பயிரின் இலைகள் வெளுத்து காணப்படும். இலைப்பகுதியின் இடையிடையே தோன்றும் இவ்வாறான வெளுத்தல் ஒழுங்கற்ற கோடுகளையோ, பட்டை போன்ற அமைப்பையோ கொண்டிருக்கும். வெளுத்தல் அறிகுறிகள் இளம் இலைகளின் அடிப்பாகத்தின் நன்கு வெளிப்படுகின்றன. வெளுத்தல் அறிகுறிகள் இலை உறைகளிலும் தண்டுபாகங்களிலும் காணப்படும். தண்டு அல்லது வெளிர்பச்சை போன்ற நிறங்களிலும் காணப்படும். கரும்பின் உட்பகுதி அழிந்து கரும்பு முழுவதும் வாடிவிடும். தேமல் அறிகுறியுடன் மஞ்சளாதல், ஒழுங்கற்ர வெளுத்தல் அல்லது மஞ்சளான பகுதிகள் ஒழுங்கற்ற தோன்றல் ஆகிய அறிகுறிகள் இந்நோயினை எளிதில் அடையாளம் காண உதவும். இந்நோயினைக் கட்டுப்படுத்த நோயுராத கரும்பிலிருந்து விதைக்கரணைகளை தேர்ந்தெடுத்து பயிரிட பயன்படுத்த வேண்டும். நோயுற்ர கரும்பு குருத்துகளை களைந்து அழிக்க வேண்டும். இதனால் நோய், பூச்சி மூலம் பரவுவதை தடுக்கலாம்.

thanks to dinakaran

Tuesday, July 16, 2013

விவசாயிகள் எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்

இயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும். இதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும்.

பஞ்சகவ்யம் - நன்மைகள்:

1. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது. 2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது. 3. நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது. 4. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. 5. பயிரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.

பஞ்சகவ்யம் தயாரித்தல்: தேவைப்படும் பொருட்கள்: பசு சாணம் - 5 கிலோ, நெய் - அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் - 2 லிட்டர், பால் - 2 லிட்டர், மாட்டு மூத்திரம் - 3 லிட்டர், கரும்பு வெல்லம் - கால் லிட்டர், இளநீர் - 2, தண்ணீர் - 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு

குறிப்பு: தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.
தயாரிக்கும் முறை: 1. முதல் நாள் - சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும். 2. 6ம் நாள் - 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும். 3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.
2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்.
4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டøயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.
ஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.

21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு - ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்.

பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.
2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது. 
3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.
4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.
5. சாணம் பயன்படுத்துவதால் தெளிப்பானில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.ஆகையால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது வால்வின் துளையினை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும.
6. பயன்படுத்துவதற்கு முன் தெளிப்பானை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
7. பஞ்சகவ்யத்தினை காலை அல்லது மாலை நேரங்களில் பயிருக்கு தெளிப்பது சிறந்தது.

நன்றி தினமலர்

வாழை தரும் உபதொழில்கள்

வாழை விவசாயத்தில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் எக்டேரில் ஒரு கோடியே 70 லட்சம் டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் எக் டேரில் வாழை விவசாயம் நடக்கிறது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில்தான் அதிக அளவில் வாழை விவசாயம் நடக்கிறது. அதனால்தான் நாடு முழுவதுக்குமான வாழை ஆராய்ச்சி நிலையத்தை திருச்சி பெற்றுள்ளது.

இவ்வளவு இருந்தும் வாழை விவசாயிகள் உபபொருட்களை தயாரிக்க கற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர். இந்தக்குறையை தவிர்க்க வாழை ஆராய்ச்சி மையத்தில் 20 விதமான வாழை உபபொருட்களை தயாரிக்கலாம் என கண்டறிந்து அறிவித்துள்ளனர். 

மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்துகூட வாழை உபபொருள் தயாரிப்பு குறித்து கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். ஜப்பானில் நார்ச்சத்துள்ள வாழை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வாழை நாரில் இருந்து ஆடை தயாரித்து பயன்படுத்துகின்றனர். 

ஜப்பான் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு நார்ச்சத்துடன் கூடிய வாழை ரகத்தை இங்கு பயிரிடுவது, வாழை நார் ஆடை தயாரிப்பது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவதிலும் திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம் இங்கு ஈடுபட்டுள்ளது. உயர்ரக கலப்பின புதிய வாழையை உருவாக்குவதில் வாழை ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டுள்ளது. இரண்டொரு மாதங்களில் இந்த உயர்ரக நார்ச்சத்துடன் கூடிய வாழை அறிமுகம் செய்யப்படும். வாழையில் இருந்து விதவிதமான உணவுப்பொருட்களுடன் பாய், காகிதம் போன்ற பிற பொருட்களையும் தயாரிக்கலாம். இப்படி வாழையில் இருந்துபிற பொருட்களை தயாரிக்க நமது விவசாயிகளும் தொழில் முனைவோர்களும் முன்வரவேண்டும். நபார்டு நிறுவனம் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உரிய பயிற்சியையும் வழங்குகிறது. தேவைப்பட்டால் கடனுதவியையும் பெற்றுத்தருகிறது. இதற்காக 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மூன்று திட்டத்தை நபார்டு நிறு வனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பாங்க், திருவாங்கூர் பாங்க், மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய 5 வங்கிகள் கடனுதவி தருவதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நன்றி தினமலர்

இஞ்சி சாகுபடி நுட்பங்கள்


இஞ்சி கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரையுள்ள வெப்ப மற்றும் ஈரப்பதமுள்ள உஷ்ண மண்டலப்பகுதிகளில் நன்கு வளரும். பொதுவாக மானாவாரி பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் முளைத்துவரும்போது மிதமான மழையளவும் அதன் வளர்ச்சிப்பருவத்தில் அதிக மழையளவு மற்றும் அதிக மழைநாட்கள் மிகவும் அவசியம். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் அல்லது லேட்டரைட் குறுமண் நிலங்களில் நன்கு வளரும்.


இனப்பெருக்கம்: இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1500-1800 கிலோ விதை இஞ்சி கரணைகள் தேவைப்படும்.
பருவம்: இந்தியாவில் மேற்கு கடலோர பகுதிகளில் இஞ்சி மே மாதங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதங்களிலும் இறவைப்பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பயிரிடப்பட்டு வருகிறது.

வகைகள்: சுக்கு உண்டாக்குவதற்கேற்ற வகைகள் - மாரன், நதியா, கரக்கால். அதிக ஒலியோ ரெசினுக்கு - ஏர்நாடு, செர்நாடு, சீனா, ரியோடிஜெனிரா. அதிக எண்ணெய்க்கு - மாரன், கரக்கால். பச்சை இஞ்சி - சீனா, ரியோ-டி-ஜெனிரா, வயநாடு, லோக்கல், மாறன் வரதா.

இஞ்சி பயிரை சாகுபடி செய்ய பிப்ரவரி-மார்ச் மாதம் கோடைக்கால மழை கிடைத்தவுடன் நிலத்தை 4-5 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும். நிலத்தை நன்றாக கொத்தி பதமாக்க வேண்டும். அதன்பின் 15 செ.மீ. உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் வைத்து பாத்திகளுக்கிடையே 40 முதல் 50 செ.மீ. இடைவெளியில் பார் அல்லது மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்.
நடவு: கோடைமழை கிடைத்தவுடனே இஞ்சி நடவு செய்ய வேண்டும். 20-25 கிராம் எடை மற்றும் 2.5 -5 செ.மீ. நீளம் உள்ள கரணைத்துண்டுகளைப் பாத்திகளில் 50 செ.மீ. x 50 செ.மீ (அ) 25 செ.மீ. x 25 செ.மீ. இடைவெளி அமைத்து சிறு குழிகளில் நடுதல் வேண்டும். திடகாத்திரமான ஒரு மொட்டாவது மேல்நோக்கி இருக்குமாறு நடவேண்டும்.

மாங்கோசெப் 0.3 சதம் மற்றும் மாலத்தியான் 0.1 சதம் ஆகிய மருந்துக்கலவையில் 30 நிமிடம் கரணைகளை ஊறவைத்திருக்க வேண்டும். பாக்டீரியா வாடல் நோய் இருக்குமானால் விதைக்கரணைகளை 200 பிபிஎம் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்துக்கரைசலில் (30 லிட்டர் தண்ணீரில் 6 கிராம் மருந்து) விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

உரமிடுதல்: ஒரு எக்டருக்கு தொழு உரம் 25 முதல் 30 டன் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 75, 50 மற்றும் 25 கிலோ இடவேண்டும். முழு மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தை அடியுரமாக இடலாம். தழைச்சத்தை கரணைகளை விதைத்த 45வது நாளிலும் மறு பாதியை சாம்பல்சத்தும் சேர்த்து 90வது நாளிலும் மேலுரமாக இடவேண்டும்.

மூடாக்கு: நட்டவுடன் பாத்தி களில் ஒரு எக்டருக்கு 12.5 டன் பச்சை இலைகளை அடர்த்தியாக இட வேண்டும். மீண்டும் நட்ட 40 மற்றும் 90வது நாட்களில் 15 டன் அளவில் இடவேண்டும். இடையில்கைக்களை எடுப்பு செய்ய வேண்டும். நட்ட 5 மற்றும் 6வது மாதங்களில் மீண்டும் களை எடுக்க வேண்டும். நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அறுவடை, மகசூல்: இஞ்சி காய்கறிக்காக பயன்படுத்துவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும். சுக்கு (உலர்ந்த இஞ்சி) தயாரிக்க பொதுவாக 245 முதல் 260 நாட்களில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது) அறுவடை செய்ய வேண்டும். சுத்தம் செய்ய கரணைகளை நீரில் கழுவி கூர்மையான மூங்கில் கொண்டு தோலை அகற்றி சுத்தமான தரையில் சீராக பரப்பி 3-9 நாட்கள் காயவைக்க வேண்டும். அவ்வப்போது அவற்றை புரட்டிவிட வேண்டும். ஒட்டிக்கொண்டிருக்கும் தோலை அகற்றி பின் பைகளில் நிரப்பி குளிரான இடத்தில் சேமிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 20-25 டன்கள் பச்சை இஞ்சி மகசூலாகக் கிடைக்கும்.
நோய்கள்: கரணை அழுகல்: மான்கோசெப் 0.3 சதம் கரைசலில் அறுவடை செய்தவுடன் விதைக்கரணைகளை வைத்திருந்து நடவேண்டும்.

பாக்டீரியா அழுகல்: ஸ்ட்ரெப்டோசைக்ளின் கலவையில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். (தகவல்: வே.தொண்டைமான், வானவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம், கோவை).

நன்றி தினமலர்

வெண்டை சாகுபடி

வெண்டை சாகுபடியில் சாதாரண ரகங்கள் அதாவது அர்க்க அனாமிகா மற்றும் அர்க்கா அபை உள்ளன. ஆனால் இவைகள் ஒட்டு வீரிய ரகங்கள் அல்ல. இருந்தாலும் விவசாயிகள் இவைகளை சாகுபடி செய்கிறார்கள். அடுத்து ஒட்டு வீரிய ரகங்களும் உள்ளன. குறிப்பாக மைக்கோ ரகங்கள் (நம்பர் 10, 11, 12) இவைகளையும் சாகுபடி செய்யலாம். இதில் ஒரு அனுகூலம் உள்ளது. விதை வாங்கும் இடத்தில் விதையை "கௌச்' என்னும் மருந்துடன் கலந்து தருகிறார்கள். இது வியாதிவராமல் தடுக்கின்றது.

வெண்டை சாகுபடி செய்பவர்கள் முதலில் வெண்டையைத் தாக்கும் மஞ்சள் நரம்பு நோய் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. வெண்டையை இளம் வயதில் மஞ்சள் நரம்பு நோய் தாக்கும். நரம்புகள் தடித்து முதலில் இலை மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை அடைவார்கள். ஆதலின் விவசாயிகள் நோய்கள் தாக்காத ரகங்களை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. கௌச் மருந்து மஞ்சள் நரம்பு நோயினை தாக்காமல் கவனித்துக் கொள்கிறது.

சாகுபடி விபரம்: சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த நிலத்தினை நன்கு உழுது ஏக்கருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 10 டன் இட்டு மீண்டும் இயற்கை உரம் மண்ணோடு நன்றாக கலக்கும்படி உழவேண்டும். பிறகு நிலத்தில் 60 செ.மீ. இடைவெளி கொடுத்து பார்சால் அமைக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த ரகங்களின் விதையை பாரில் விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளியில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகள் விதைக்க வேண்டும். விதைத்த பின் எம்.என். மிக்சர் 5 கிலோவை மணலுடன் கலந்து ஒரே சீராக இடவேண்டும். உடனே பாசனம் செய்ய வேண்டும். செடி முளைத்து மூன்று இலை பருவத்தை அடைந்தவுடன் ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் அன்னபேதி உப்பு மற்றும் 20 கிராம் யூரியா இவைகளை கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். வளர்ச்சி காலத்தில் மூன்று களையெடுக்க வேண்டும். இரண்டாவது களையெடுக்கும் சமயம் ஏக்கருக்கு ஒரு மூடை டி.ஏ.பி.,ஒரு மூடை பொட்டாஷ் இட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். செடி முளைத்து வரும்போது அதாவது செடியின் வயது 25 நாட்கள் இருக்கும்போது கான்பிடார் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தெளித்துவிட வேண்டும்.

இந்த மருந்தின் காரம் நீண்டநாள் இருக்குமாதலால் விதை விதைத்து சுமார் 70 நாட்கள் மங்சள் நோய் வராமல் தடுக்கும். கான்பிடார் மருந்தினை ஒருமுறை பயன்படுத்தினால் போதும். நிலத்தில் 35வது நாளிலிருந்து காய்கள் காய்க்கத் துவங்கும். செடியின் வயது 25 நாட்களாக இருந்தபோதும் கான்பிடார் காரம் விஷம் இருக்காது. சாம்பல் நோய் லேசாக தலைகாட்டும். உடனே ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் நனையும் கந்தகம் கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும்.

வெண்டை செடிகள் அதிக அளவு உஷ்ணத்தால் அடிபடாமல் இருக்க வெண்டை செடிகளைச் சுற்றி கொத்தவரை செடிகளை வளர்க்கலாம். இதற்கு பூஸா நௌபஹார் ரகத்தை இடலாம். வெண்டை சாகுபடி செய்த நிலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் மரக்குச்சிகளை ஒரு அடி இடைவெளியில் நட்டுவிட வேண்டும். வயலினுள் வெண்டையை விதைக்கும்போது ஏற்கனவே நட்ட குச்சிகள் அடிப்பாகத்தில் குழியெடுத்து குழிக்கு இரண்டு விதை வீதம் கொத்தவரை விதையை விதைக்கலாம். கொத்தவரை செடிகள் வளர்ந்த மேல் கொத்தவரை செடிகளை குச்சியோடு சேர்த்து கட்டவேண்டும். கொத்தவரை செடிகள் வெண்டை செடிகள் வேர்களில் உஷ்ணக்காற்றின் பாதிப்பு இல்லாமல் கவனித்துக் கொள்கிறது. கொத்தவரை சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ.2,000 வருமானம் கிடைக்கிறது.

வெண்டை அறுவடை: நிலத்தில் விதைத்த 35-ம் நாள் முதல் அறுவடை கிடைக்கும். இரண்டு மூன்று நாட்கள் இடைவெளியில் அறுவடை கிடைக்கும். மொத்தமாக 20, 25 அறுவடை செய்யலாம். ஆனியில் பாடுபட்டு உழைத்தால் ஏக்கரில் நிகரலாபம் ரூ.28,000 வரை கிடைக்க வாய்ப்பு உண்டு.

நன்றி தினமலர்

Friday, July 12, 2013

பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துதல்!

பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. பருத்தியில் தத்துப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது.

சேத அறிகுறிகள்: தத்துப் பூச்சியானது பருத்தி தவிர நிலக்கடலை, ஆமணக்கு, கத்திரி, வெண்டை போன்ற பயிர்களையும் தாக்குகிறது. இளம் மற்றும் வளர்ச்சி அடைந்த பூச்சிகள் இலைகளிலுள்ள சாற்றை உறுஞ்சுவதால், இலைகளானது சுருண்டு விடுகின்றன. மேலும் இலைகளின் ஓரங்கள் காய்ந்து, தீய்ந்ததுபோல் காணப்படுகின்றன. இதன் தாக்குதல் அதிகமாகும்போது இலைகள் காயந்து பின்னர் உதிர்ந்து விடுகின்றன.

 மேலும் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பூ மற்றும் காய் பிடிப்பது குறைகிறது. பருத்தி பஞ்சின் தரமும் குறைகிறது. இதன் தாக்குதலால் சுமார் 35 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வாழ்க்கை பருவம்: பெண் பூச்சியானது சுமார் 13 முட்டைகளை இலைகளுக்கு அடியில், இலை நரம்புகளில் இட்டுச் செல்கின்றன. முட்டைப் பருவமானது 4 முதல் 11 நாள்கள் ஆகும். முட்டையிலிருந்து வெளியேவரும் இளம் பூச்சிகளின் பருவமானது 21 நாள்களில் முடிவடைந்து வளர்ச்சி அடைந்த பூச்சியாக மாறுகிறது. பூச்சியானது இளம் பச்சை நிறத்தில் இருக்கும். இவை பக்கவாட்டில் நகரும் தன்மை கொண்டது.

கட்டுப்படுத்தும் வழிகள்: ஒருகிலோ பருத்தி விதைக்கு இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூஎஸ் 5 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். பயறு வகைகளை ஊடுபயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளை அதிகப்படுத்த வேண்டும். பொருளாதார சேத நிலையை தாண்டும்போது பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவு தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு இமிடாகுளோபிரிட் 200 எஸ்எல் 100 மிலி அல்லது அசிட்டமிபிரிடு 20 எஸ்பி 50 கிராம் அல்லது புரபனோபாஸ் 50 இசி 1000 மிலி அல்லது டைமீத்தோயேட் 30 இசி 600 மிலி மருந்தை தெளிக்க வேண்டும் என்றார் அவர்.