முந்திரி மரம் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. முந்திரி பெரிய மரங்களாக படர்ந்து வளரும் மர இனமாகும் புதிய ரகங்களும், ஒட்டுக்கன்றுகளும் படர்வு குறைவாக இருக்கும். முந்திரி 7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த இடைவெளி முறையில் ஏக்கருக்கு 80 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கலாம். புதிய தொழில்நுட்பமான அடர்நடவு முறையில் 5 பை 4 மீட்டர் இடைவெளியில் அதிகளவு ஏக்கருக்கு 200 கன்றுகளை வைத்து பராமரிக்கலாம். இவ்விருமுறைகளிலும் குறுகிய இடைவெளியில் அதிகளவு மரங்களை பராமரிக்கும் பொழுது கிளைகளை கவாத்து செய்தல் அவசியம்.நோய்வாய்ப்பட்ட கிளைகள், குறுக்கும் நெடுக்குமான கிளைகள், நீர்போத்துகள் ஆகியவற்றை நீக்குவதால் சூரியஒளி உட்புகுந்து நல்ல காற்றோட்டமும், சீரான வளர்ச்சியும் மரங்களுக்கு கிடைக்கும்.முந்திரி மரங்கள் புதிய கிளைகளில் பூத்து காய்க்கும். ஆகஸ்டு மாதம் வரும் புதுதளிர்களில் இருந்து டிசம்பர் மாதம் பூக்கள் மலரும். முந்திரி காய்த்து முடிந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மூன்றாமடுக்கு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
வெட்டுப்பட்ட காயங்களில் போர்டோபசை அல்லது பைட்டலான் மருந்தை சுண்ணாம்பு பதத்தில் கலந்து பூச வேண்டும். இது பின்கருகல் நோயிலிருந்து மரங்களை பாதுகாக்கும். மேம்படுத்தப்பட்ட உரப்பரிந்துரையான ஒரு மரத்திற்கு 1000:125:250 கிராம் அளவு கொண்ட தழை, மணி, சாம்பல் சத்துக் கலவையை அடியுரமாக கொடுக்க வேண்டும். சிறிய மரங்களுக்கு வயதுக்கு தகுந்தபடி உர அளவைக் குறைத்து கொள்ளுதல் வேண்டும். ஒருவயது உரப்பரிந்துரையில் ஐந்தில் ஒருபகுதி, 2 வயது 5-ல் இரண்டு பகுதி என்பது போல் கணக்கிட வேண்டும்.
முதல் மேலுர தெளிப்பில் கவாத்து செய்து 30 அல்லது 45 நாட்களுக்குள் புதிய கிளைகளும், புதுத்தளிர்களும் நன்கு வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு மேலுரத்தெளிப்பு கொடுக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து 19:19:19 கலவையை மேலுரமாக தெளிக்க வேண்டும்.
இரண்டாம் மேலுர தெளிப்பின் போது முந்திரியின் பூக்கும் தன்மை ரகங்களை சார்ந்து வேறுபடும். பெரும்பாலான ரகங்களும், விதைக்கன்றுகளும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும். தமிழகத்தில் பிரபலமான ரகமான விஆர்ஐ 3 மட்டும் டிசம்பர் முதல் வாரத்திலேயே பூக்கத் தொடங்கும். புதிய வீரிய ஒட்டுரகமான விஆர்ஐ(முந்திரி) எச்1 டிசம்பர் கடைசிவாரம் பூக்கத் தொடங்கும். பூங்கொத்துகள் தோன்றியவுடன் இரண்டாம் தெளிப்பாக மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஒரு சத மேலுரக்கலவையை போரான் கலந்து தெளிக்க வேண்டும். இந்த பருவத்தில் தேயிலை கொசு, இலைச்சுருட்டு புழு தாக்குதல் அதிகம் காணப்படலாம்.
மூன்றாம் மேலுரத் தெளிப்பின் போது முந்திரியில் மண், மரத்திலுள்ள சத்துக்களை பொறுத்தே பூ, காய்பிடிப்பு திறன் வேறுபடுகின்றது.முந்திரி ஒரு மானாவாரி பயிராக இருப்பினும் அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடிய பயிராக இருப்பினும் அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடிய பயிராக இருப்பினும் சரியான நீர்ப்பாசனமும், உர நிர்வாகமும் செய்யப்பட்ட தோப்பில் அதிகமான விளைச்சலை தரக்கூடியது.
எனவே, காய்ப்பிடிப்பு தொடங்கியவுடன் வேளாண் பல்கலையின் த.வே.ப.க பஞ்சகாவியக் கரைசலை மேலுரமாக தெளிப்பது நல்லது.இவ்வாறு முந்திரி மரங்களை தெளிப்பதன் மூலம் பூக்கும் திறன் , காய்க்கும் திறன், முந்திரிக்கொட்டை வளர்ச்சி, விளைச்சல்,பருப்பின் தரம் ஆகியவற்றை அதிகரிக்கலாம். இந்த கவாத்து, மேலுரத் தெளிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் 30 முதல் 40 சதவீதம் அதிக விளைச்சலை பெறலாம்.
