ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மண் வளம் மற்றும் மகசூல் குறைபாடுகளைத் தவிர்க்க விவசாயிகள் அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தி அமோக விளைச்சல் பெறலாம் என திரூர் நெல் ஆராய்ச்சி மையத் தலைவர் கோ.வி.இராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொதுவாக நவீன யுகத்தில் விவசாயத்துக்கும் பசுமை புரட்சி என்ற பெயரில் அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அதிக பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் பயிர்களுக்கு தீமை விளைக்கும் பூச்சிகள் அழிவதுடன் விவசாயத்துக்கு துணைபுரியும் நுண்ணுயிர்களும் அழிந்துவிடுவது வருந்தத்தக்கது. ரசாயன உரங்களால் மண் வளம் மாசுபடுவதோடு சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்தால் விளைவிக்கப்படும் பொருள்களை உட்கொள்ளும் மனிதனுக்கும் மறைமுக தீங்குகள், பக்க விளைவுகள் ஏற்படலாம்.
எனவே விவசாயிகள் இயற்கை உரங்களாகிய தொழு உரம் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நீலப்பச்சை பாசி, அசோலா ஆகிய உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தினால் மண் வளம் செழிப்பாக இருப்பதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. அசோலா என்பது உயிர் உரங்களில் முக்கியமானதும், விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுவதுமாகும்.
அசோலாவின் தன்மைகள்:
- தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
- பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
- பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது.
- நாற்றங்கால் விடப்பட்ட 2-3 நாள்களில் இரு மடங்காக பெருகும்.
- உற்பத்தி பெருக்கமும் சுலபம்.
- அசோலா அதிக புரதச்சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
- நீர் நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள் மற்றும் கொசுக்களையும் கட்டுப்படுத்துகிறது.
எனவே விவசாயிகள் தங்களது மண் வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிர் உரத்தை பயன்படுத்தலாம்