Sunday, August 8, 2010

செம்மை நெல் சாகுபடியில் நாற்றாங்கால் தயாரிப்பும், பராமரிப்பும்


தற்போது நெல் சாகுபடி தண்ணீர் பற்றாக்குறை, கூடுதல் இடுபொருள் செலவு, வேலையாள்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் லாபகரமாக இல்லாததால் குறைந்த தண்ணீர், இடுபொருள் மூலம் அதிக மகசூலும், லாபமும் பெறுவதற்கான நவீன சாகுபடி முறையே செம்மை நெல் சாகுபடியாகும். இந்தச் சாகுபடி முறையில் நாற்றாங்கால் தயாரித்து, பராமரித்து வந்தால் உயர்விளைச்சல் பெற முடியும்.
செம்மை நெல் சாகுபடி முறை:
செம்மை நெல் சாகுபடி மிகக் குறைந்த விதை அளவில் (ஏக்கருக்கு 3 கிலோ) பாய் நாற்றாங்கால் அமைத்து 14 நாளில் ஒற்றை நாற்றை 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு நடும் சாகுபடி முறையாகும். நட்ட 10, 20, 30 மற்றும் 40-ம் நாள்களில் களைக்கருவி மூலம் குறுக்கும் நெடுக்குமாக நான்கு முறைகளை மேலாண்மை செய்ய வேண்டும். குறைந்த அளவு நீரைக் கொண்டு நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
நாற்றாங்காலின் முக்கியத்துவம்:
நெல் சாகுபடிக்கு அடிப்படையே நாற்றாங்கால்தான். குறைந்த அளவு விதையைப் பயன்படுத்தி நேர்த்தியான முறையில் நாற்றுகளை வளர்க்க வேண்டும். நாற்று மேடைகள் அமைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
செம்மை நெல் சாகுபடிக்கு அனைத்து நெல் ரகங்களும் உகந்தவை. ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும். நாற்றாங்காலைப் பொருத்தவரை ஒரு ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட் பரப்பளவு தேவைப்படும்.
விதை நேர்த்தி:
நெல் விதைகளை உயிரி உரம், சூடோமோனாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்வது சிறந்தது. ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸும், மூன்று கிலோ விதைக்கு 200 கிராம் சோபாஸ் உயிரி உரமும் தேவைப்படும். இவற்றைத் தேவையான அளவு அரிசி வடிகஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்து பின்னர் விதைகளுடன் நன்றாகக் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் உலர்த்திய விதைகளை 24 மணி நேரம் ஊறவைத்து முளைகட்ட வேண்டும். வடிகட்டிய தண்ணீரை நாற்றாங்காலில் ஊற்றலாம். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைந்து வாளிப்பாக வளரும்.
நாற்றாங்கால் தயாரித்தல்:
நடவு வயலின் ஓரத்தில் மண்ணை எடுத்து 5 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்துக்கு எட்டு நாற்று மேடைகளை உருவாக்க வேண்டும். நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரத்துக்கு நாற்றுமேடைகள் அமைக்கப்பட வேண்டும். நாற்று மேடை நன்கு வளமாக இருந்தால் தொழு உரமோ அல்லது டிஏபி உரமோ தேவையில்லை. வளம் குன்றிய மண்ணாக இருந்தால் தொழு உரம் போடலாம். ஒரு மேடைக்கு 95 கிராம் வீதம் மொத்தம் 8 மேடைகளுக்கு 760 கிராம் டிஏபி உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்றுமேடைகளில் நிரப்ப வேண்டும்.
நாற்று மேடையை நன்றாக சமப்படுத்தி, அதன் மேல் பாலிதீன் தாள் அல்லது பழைய உர சாக்குகளைப் பரப்ப வேண்டும். பின்னர் 4 செ.மீ. உயரத்துக்கு நாற்று மேடை மண்ணை நிரப்ப வேண்டும். முளைகட்டிய விதைகளை எட்டு நாற்று மேடைகளுக்கும் சமமாகப் பிரித்து பரவலாக விதைக்க வேண்டும். இரண்டு நாற்று மேடைகளுக்கு இடையே சுமார் 30 செ.மீ. அகலத்துக்கு வாய்க்கால்கள் இருப்பதால் பாசனத்துக்கும் தேவைப்படின் நீரை வடிக்கும் வடிகாலாகவும் பயன்படும்.
நாற்றாங்கால் பராமரிப்பு:
நாற்றாங்கால் தயார் செய்த பின் முதல் நான்கு நாள்களுக்கு பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம். அல்லது நாற்று மேடைகளுக்கு இடைப்பட்ட பள்ளங்கள் வழியாக நீர் பாய்ச்சலாம். நாற்றுகள் 16 நாள்களில் நடவு செய்யத் தயாராகிவிடும். நாற்றுகள் 10 முதல் 12 செ.மீ. நீளத்துடன் 5 இலைகளைக் கொண்டிருக்கும். நாற்றுகளில் போதிய வளர்ச்சி இல்லையெனில் 0.5 சதம் யூரியா கரைசலை விதைத்த பத்தாம் நாளில் தெளித்து வீரியமான நாற்றுகளை உருவாக்கலாம். தேவைக்கேற்ப நாற்றாங்காலைக் காயவிடாமல் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றாங்காலில் பூச்சி அல்லது நோய்கள் தென்பட்டால் பொருளாதார சேத நிலைக்கேற்ப மேலாண்மை முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம்.