விழுப்புரம் மாவட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்து நிகர லாபமாக ரூ.11.80 லட்சம் ஈட்டியுள்ளார் பெண் விவசாயி கோகிலா.
தியாகதுருகம் ஒன்றியம், ஓகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா. தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டு நீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் மஞ்சள் கிழங்கு பயிரிட்டார். 2009 ஜூன் மாதம் முதல் வாரத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உரிய இடைவெளியில் நடவு செய்து, அடியுரமாக தொழு உரம் 5,500 கிலோ, விரிடி 10 கிலோ, சூடோமோனஸ் 10 கிலோ இட்டு நடவு செய்துள்ளார்.
மேலும் தோட்டக்கலைத் துறை வழங்கிய சொட்டுநீர் பாசனக்கருவி அமைத்து நீர்வழி உரமளிக்கும் டாங்க் மூலம் வாரத்துக்கு இருமுறை நீரில் கரையும் உரத்தை இட்டு, 4 மூட்டை (100 கி) சல்பேட்டா, 2 மூட்டை (50 கி) பொட்டாஷ் ஆகியவை மேலுரமாக போட்டுள்ளார். மேலும் சூடோமோனஸ் 1 லிட்டர் மற்றும் விரிடி 1 லிட்டர் திரவங்களை உரடாங்க் மூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோகிலா கூறியது: உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு முறைகள் உள்பட அனைத்து தொழில்நுட்பங்களையும் தோட்டக்கலை உதவி இயக்குநரின் நேரடி வயல் ஆய்வின் மூலம் பெற்று சீரான நடவடிக்கை மேற்கொண்டேன். எனது மஞ்சள் பயிர் 2010 மார்ச் இறுதி வாரத்தில் அறுவடைக்கு வந்தது. அறுவடையின் போது எனக்கு விரல் மஞ்சள் 2 ஏக்கருக்கு 26 ஆயிரம் கிலோ மற்றும் உருளை மஞ்சள் 4 ஆயிரம் கிடைத்தது. விரல் மஞ்சளை ஒரு கிலோ ரூ.40 வீதமும், உருளை மஞ்சளை ஒரு கிலோ ரூ.60 வீதமும் விற்பனை செய்தேன். மொத்த வருமானமாக ரூ.12.80 லட்சம் கிடைத்தது. இதற்காக நான் ரூ.1 லட்சம் செலவு செய்தேன். இதில் என்னுடைய சாகுபடி செலவு போக நிகர வருமானமாக ரூ.11.80 லட்சம் பெற்றுள்ளேன் என்றார்.