Monday, August 9, 2010

நெல் – நாவாய்ப் பூச்சி


உங்கள் நெல் பயிர் கதிர்ப்பருவத்தில் உள்ளதா? பயிரில் கதிர் நாவாய்ப்பூச்சி நடமாட்டம் உள்ளதா என்று காலை நேரத்தில் கவனியுங்கள். குறிப்பாக, உங்கள் பயிர் மற்ற விவசாயிகளின் பயிருக்கு பிந்தி நட்ட பயிர் எனில் நன்கு கண்காணிக்க வேண்டும்.
  • கதிர் நாவாய்பூச்சிகள் நீண்டகாலங்கள் மற்றும் உணர் கொம்புகளுடன் காணப்படும்.
  • உடல் பழுப்பு நிறத்தில் சுமார் இரண்டு செ.மீ. நீளமானது.
  • பூச்சியினைக் கையால் தொட்டால் துர்நாற்றம் வீசும்.
  • தீவிர தாக்குதல் உள்ள வயலிலும் துர்நாற்றம் வீசும்.
இதனைக் கட்டுப்படுத்த லிண்டேன் 1.3 சத தூள் அல்லது மாலத்தியான் ஐந்து சத தூளினை ஏக்கருக்கு பத்து கிலோ வீதம் அதிகாலை நேரத்தில் பனிப்பதத்தில் தூவ வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் மானோகுரோட்டோபாஸ் அல்லது மாலத்தியான் திரவ மருந்தினை ஏக்கருக்கு 200 மில்லி வீதம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும்.
மேலும் ஆங்காங்கே வெண்கதிர் தென்பட்டால் டீலக்ஸ் பொன்னி, செல்லப்பொன்னி மற்றும் பால் ஒட்டு பயிரிட்டுள்ளவர்கள் கதிரின் கழுத்துப் பாகத்தினையும் கவனியுங்கள். குலைநோய் தாக்கியிருந்தால் கதிரின் கழுத்துப்பாகம் பழுப்பு நிறமடைந்தும் கதிர் வெண்சாவியாகியும் காணப்படும். தற்போதுள்ள காலை குளிர் மற்றும் அதிக அளவு தழைச்சத்து உரங்கள் இடுதல் கதிர் குலைநோயை ஏற்படுத்தும். கதிர் குலைநோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 தீணீ120 கிராம் வீதம் பயிர் முழுவதும் படும்படி தெளிக்க வேண்டும். மருந்துக் கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக, சாண்டோவிட், இண்ட்ரான், ஸ்டிக்கால், பைட்டோவிட், அக்ரோவிட் போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.