விழுப்புரத்தை அடுத்த, கோலியனூரில் சூசைநாதன் என்ற விவசாயி, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்தவாறு மஞ்சள் பயிர் செய்து அறுவடைக்கு பின் மிகுந்த லாபத்தை எதிர்பார்க்கவுள்ளனர்.
தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
- சாகுபடிக்குத் தேர்வு செய்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை 4 தடவை உழவு செய்து, 8 டிராக்டர் லோடுகள் தொழுஉரம் இட்டு, நாட்டுக் கலப்பை மூலம் கடைசி உழவு செய்து 37.5 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து இதில் 15 செ.மீ. இடைவெளியில் மஞ்சள் கிழங்குகளை ஜூன் மாதம் நடவு செய்தேன்.
- 1200 கிலோ விதை மஞ்சள் கிழங்குகள் பயன்படுத்தப்பட்டன.
நீர் நிர்வாகம்:
- பார்களுக்கு இடையே நீர்ப்பாசனம் செய்து மஞ்சள் விதைக் கிழங்கை பார்களின் பக்கவாட்டில் நடவு செய்யப்பட்டது.
- பிறகு ஐந்தாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
- பிறகு வாரம் ஒருமுறை மண்ணின் ஈரத்துக்கு ஏற்றார்போல் நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.
மேலுரம்:
- நடவு செய்த இரண்டாம் மாதம் யூரியா 2 மூட்டை, 17:17:17 காம்ப்ளெக்ஸ் 1 மூட்டை, டிஏபி 1 மூட்டை வீதம் களையெடுத்து உரம் இட்டு, மண் அணைத்து நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.
- நடவு செய்த மூன்றாம் மாதம் காம்ப்ளெக்ஸ் 4 மூட்டை, பொட்டாஷ் 2 மூட்டை, யூரியா 2 மூட்டை வீதம் செடிகளுக்கு அருகில் இட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.
- நான்காம் மாதம் காம்ப்ளெக்ஸ் 1 மூட்டை, பொட்டாஷ் 6 மூட்டை, டிஏபி 1 மூட்டை வீதம் இட்டு நீர்ப்பாசனம் செய்தேன்.
- நடவு செய்த 6-ம் மாதத்தில் வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ, பொட்டாஷ் 4 மூட்டை, அம்மோனியம் சல்பேட் 1 மூட்டை வீதம் இட்டு நீர்ப்பாசனம் செய்து பராமரிக்கப்பட்டது.
மேலும் கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலைத் துறையினர் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வழங்கிய 112 கிலோ மண்புழு உரம், 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 12.50 கிலோ நுண்ணூட்ட உரங்கள், 8 கிலோ 19:19:19 மற்றும் 4 கிலோ 13:00:45 நீரில் கரையும் உரங்கள், செடிக்கு செடி இட்டு மண் அணைத்து நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.பின்னர் 6 கிலோ சூடோமோனாஸ் உயிர் உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து செடிக்கு செடி இட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது.
பயிர் பாதுகாப்பு:
- மஞ்சள் இலைகளில் தோன்றிய இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த டைமெத்தியேட் மருந்து 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரிலும்,
- இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த கார்பன்சாசிம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரிலும் கலந்து தெளித்து பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டது
என்றார் சூசைநாதன்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வீராசாமி கூறியது: தோட்டக்கலைத் துறையின் பரிந்துரையின் பேரில் முறையாக அந்த விவசாயி பயிர் பாதுகாப்பு செய்துள்ளார். மார்ச் மாதத்தில் அறுவடைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் உள்ள நிலவரப்படி சராசரியாக செடிக்கு 170 கிராம் வரை மஞ்சள் கிழங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தமாக ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலிருந்து 15 மெட்ரிக்டன் பச்சை கிழங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வீராசாமி கூறியது: தோட்டக்கலைத் துறையின் பரிந்துரையின் பேரில் முறையாக அந்த விவசாயி பயிர் பாதுகாப்பு செய்துள்ளார். மார்ச் மாதத்தில் அறுவடைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் உள்ள நிலவரப்படி சராசரியாக செடிக்கு 170 கிராம் வரை மஞ்சள் கிழங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தமாக ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலிருந்து 15 மெட்ரிக்டன் பச்சை கிழங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
உலர் மஞ்சள் 3000 கிலோ கிடைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.இன்றைய சேலம் லீ சந்தை நிலவரப்படி குவிண்டால் ரூ. 17 ஆயிரத்துக்கு விற்பனை செய்தாலும் ரூ. 5.10 லட்சம் வரை மொத்த வருமானமாகவும், ரூ. 4.10 லட்சம் வரை நிகர லாபமாகவும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.