சங்ககிரி, ஜூன் 23: கோடை மழையை பயன்படுத்தி மானாவாரியில் பயறுவகைப் பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகிய பயிர்களை விதைக்க தயாராகவுள்ள விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரத்தினை அடி உரமாக இட சங்ககிரி வோளாண் உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
÷கடைசி உழவில் ஏக்கருக்கு ஐந்து டன் தொழு உரம் இட்டு மானாவாரியில் பயிர்சாகுபடி செய்யும் வழக்கம் மறைந்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஏனெனில் தொழு உரம் அதிகமாக தயாரிப்பது என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இருப்பினும் மானாவாரியில் சாகுபடி செய்யும் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரவும், அதிக மகசூல் கொடுக்க தேவையான சத்துக்களை அடியுரமிடுவதும் அவசியமான ஒன்றாகும். எனவே தற்பொழுது கிடைக்கக் கூடிய குறைந்த தொழு உரத்துடன் பயிர்களுக்கு தேவைப்படும் சத்துக்களை தரும் இரசாயான உரங்களை கலந்து ஊட்டமேற்றிய தொழு உரமாக தயாரித்து இட வேண்டும்.
ஒரு ஏக்கர் பயறுவகைப் பயிர்களுக்கு அடியுரமிட குறைந்தபட்சம் ஒரு வண்டி மக்கிய தொழு உரத்துடன் 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை நன்கு கலந்து மேடான இடத்தில் குவித்து வைத்து, காற்றுப்புகா வண்ணம் சேறு பூசி மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.
மக்கிய தொழு உரத்துடன் கலந்துள்ள சூப்பர் பாஸ்பேட் உரமானது வேக வைத்த உணவு போல் நன்கு மக்கி ஊட்டமேற்றிய தொழு உரமாக மாறுகிறது. இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் ஏக்கருக்கு 12 கிலோ யூரியா கலந்து பயறுவகை விதைக்கும் முன் விதைப்பு சாலில் சீராக இட வேண்டும். இவ்வாறு அடியுரமாக இடுவதால் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சுடாமல் காப்பதுடன், அதிக வேர்கள் வளர்ந்து மண்ணில் உள்ள ஈரத்தை பயிர்களுக்கு எடுத்துக் கொடுப்பதால் வறட்சியைத் தாங்கி பயிர் நன்கு வளர்வதுடன் அதிக மகசூல் கிடைக்கும்.
மேலும் மானாவாரியில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யும் போது விதை விதைக்கும் கருவியை பயன்படுத்தி விதைப்பு செய்வதுடன் பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ ஜிப்சம் அடியுரமிட வேண்டும். விதைத்த 30 மற்றும் 45வது நாட்களில் மழை பெய்து போதிய ஈரம் இருக்கும்போது 2 சதவீதம் டிஏபி உரக்கரைசல் தெளிக்க வேண்டும்.