சர்க்கரை நோயாளிகள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும், மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய் சாத்தூர் பகுதியில் முன்கூட்டியே விளைந்துள்ளதால் இப்பகுதி அதலைக்காய் சுற்று வட்டார பகுதியில் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியான கலிங்கபட்டி, வண்ணிமடை, போத்திரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கொல்லபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கரிசல்காட்டு பகுதியில் மழை காலங்களில் அதலைசெடிகள் முளைத்து ஏராளமாக காணப்படுகிறது. இந்த செடிகளில் அதிக அளவில் அதலைக்காய்கள் விளைந்துள்ளன. இந்த அதலைக்காய் சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மையுடன் விளங்குறது.
சாத்தூர் பகுதியில் விளையும் அதலைகாய்க்கு சுற்று வட்டார பகுதிகளில் தனி மவுசு உண்டு. இங்கு விளையும் அதலைக்காய்கள் திருச்சி, மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பொதுவாக இக்காயினை உடனடியாக சமைத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் தன்மையும் ருசியும் மாறி அது தானகவே முளைக்கத் துவங்கிவிடும். இதை தனியாக விவசாயம் செய்ய முடியாது. தானாகவே காட்டில் வளரும் தன்மை கொண்டது.
இதுகுறித்து மருத்துவர் வெங்கடேஷ் கூறுகையில், அதலைக்காய்,பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது. இது சர்க்கரைநோய், மஞ்சள்காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. கசப்பு தன்மை இருந்தாலும் ருசி மிகுந்தது என்றார்.