கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா, கடைமடைப் பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் 50 சதவீத நிலங்களில் நீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் ஆண்டுதோறும் வெள்ளம், வறட்சி, புயல் என மாறி, மாறி விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
பலர் விவசாயத் தொழிலையே விட்டுவிட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், மேட்டூரிலிருந்து நீர் தாமதமாக திறக்கப்பட்டதாலும் விவசாயிகள் போதிய நீரின்றி சம்பா பயிர் சாகுபடியை தாமதமாக தொடங்கினர்.
தாமதமாக நீர் திறக்கப்பட்டதால் தமிழக அரசு நேரடி நெல் விதைப்பு சாகுபடி திட்டத்தை அறிவித்து, அதற்கு பல்வேறு மானியத் தொகையையும் அறிவித்தது.
இதை நம்பி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது நிலம் புயலால் ஏற்பட்ட கனமழையில் நீரில் மூழ்கி மீண்டும் உயிர்பெற்ற பயிர்கள் தற்போது நீரின்றி காய்ந்து வருகின்றன.
இது குறித்து உழவர் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: "இந்த இரண்டு தாலுக்காக்களிலும் 1 லட்சத்து 2916 ஏக்கரில் பாசனம் நடைபெற்று வருகிறது.
இதில் 30 சதவீதம் நெற்பயிர்கள் கதிர்வரும், அதாவது பால்கட்டும் தருவாயில் உள்ளது. 40 சதவீதம் நெற்பயிர்கள் 50-60 நாள் பயிர்களாக உள்ளது.30 சதவீதம் நெற்பயிர்கள் நடவு நட்டு 20-30 நாள் பயிர்களாக உள்ளது. வடவாறு, வீராணம் ஏரி போன்ற பாசனத் தலைப்பு பகுதிகளில் உள்ள நிலங்களில் இன்றும் ஒருவாரத்துக்குதான் ஈரப்பசை இருக்கும்.
மற்ற பகுதிகளில் 3 முதல் 5 நாள்கள்தான் ஈரப்பசை இருக்கும். தற்போது 5 நாள்களுக்குள் நீர் கிடைத்தால் இந்த பயிர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளன.ஆனால் தற்போது 5 நாள்களுக்குள் நீர் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் நெற்பயிர்கள் அனைத்தும் நிச்சயம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது கடை, மடைப் பகுதிகளில் சிதம்பரம் அருகே மணலூர், பாலூத்தங்கரை, கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, தையாக்குப்பம், காட்டுமன்னார்கோவில் அருகே நந்திமங்கலம், அத்திப்பட்டு, நளம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெற்பயிர்கள் நீரின்றி கருகியுள்ளன.
தற்போது தமிழக முதல்வர் பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளின் பிரீமியம் தொகையை அரசே செலுத்தி ஏக்கருக்கு ரூ.8962-ம், மாநில அரசின் நிதி ரூ.5 ஆயிரம் சேர்த்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருத்தியமைக்கப்பட்ட புதிய காப்பீடுத் திட்டத்தை கிராம அளவில் கணக்கிட்டு செயல்படுத்தினால் கூடுதலான இழப்பீடு தொகை கிடைக்கும்.
எனவே திருத்தியமைக்கப்பட்ட புதிய காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்' என்கிறார் பி.ரவீந்திரன்.