நாட்டின் மக்கள் தொகை வரும்
2025க்குள் 1394 மில்லியன்களாக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பெருகி வரும் மக்கள்
தொகைக்கு ஏற்ப தேவைப்படும் உண்வு உற்பத்தியை 234.47 மில்லியன் டன்களில் இருந்து 35 மில்லியன்
டன்களுக்கு உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம். நம்நாட்டின் நீர் தேவை வேளாண்மைக்கு
2 மடங்கும் தொழிற்சாலைகளுக்கு 7 மடங்காகவும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீரின் அளவை கணக்கிட்டு 2025 ல் சுமார் 50 சதவீதம்
நீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.எனவே, கிடைக்கும் குறைந்த அளவு நீரை கொண்டு
உற்பத்தி திறனையும் அதிகரிக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் ஆண்டுதோறும் பயிரிடப்படும்
60 லட்சம் எக்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் வரை தான் நீர்பாசன வசதியை பெருகிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இது குறைவாகும். இவை கால்வாய் ஏரி, கிணற்றுப்பாசனம்
போன்றவற்றின் மூலம் தான் பெரும்பாலும் பாசனம் செய்யப்படுகிறது.
இந்தபாசன முறையின் மூலம் நீர்ப்பாய்ச்சுவதால்
அதிகளவு நீர் வீணாகிறது. எனவே, குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம், பெருகிவரும் மக்கள்
தொகையை கணக்கிட்டு பாசன நீரை அறிவியல் அடிப்படையில் பயன்படுத்தி நீர் தேவையை அதிகரிக்க
வேண்டியது அவசியம்.
ஒருங்கிணைந்த நீர்பாசன முறையில் பயிர்களின் தேவையை
அறிந்து, தேவைப்பட்ட நேரத்தில், தேவையான நீரை தருவது முக்கிய பணியாகும்.
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில்
நெல் முக்கியமானது. தற்போது நீர்ப்பாசனத்திற்கு கிடைக்கக் கூடிய நீரில் சுமார் 80 சதவீத
நெற்பயிர் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெற்பயிரின் வளர்ச்சிக்கும்
எடுத்துக் கொள்ளும் நீரின் அளவோ, சுமார் 1 முதல் 3 சதவீதம் மட்டுமே ஆகும். நெற்பயிர்
சாகுபடியில் அதிக நீர் தேக்காமல், ஊடொளி சமன்படுத்தும் கருவியைக் கொண்டு நிலத்தை சமன்படுத்தி,
சிறப்பான களைக்கட்டுப்பாட்டினை மேற்கொண்டு, முறையான நீர்பாசனத்தை கையாள்வதால், சுமார்
60 சதவீத நீர் சிக்கனம் செய்ய முடியும். இதனால் பாசன பரப்பினை தற்போது கிடைக்கக்கூடிய நீரின் அளவைக் கொண்டே ஏறக்
குறைய இருமடங்கு அதிகரிக்க முடியும்.
ஒருங்கிணைந்த நீர்பாசன முறையில் கோடை உழவு செய்து
பின்னர் நிலத்தை சமச்சீராக தயார் செய்ய வேண்டும். களைகள் பயிர்களைவிட மூன்று மடங்கு
வேகமாகவும், அதிகமாகவும் தண்ணீரை உறிஞ்சி நீராவிப்போக்காக வெளியிடும் திறன் கொண்டவை.
எனவே, சரியான தருணத்தில் களைக்கட்டுப்பாடு செய்வதன் மூலம் பாசன நீரை கணிசமாக சேமிக்க
முடியும். தொழில்நுட்பங்களை மேற்கொள்வதன் மூலம் பாசன நீரை கணிசமாக சேமிக்க முடியும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 28 லட்சம் எக்டராக இருந்த நெல் சாகுபடி பரப்பு
சுமார் தற்போது சுமார் 20 லட்சம் எக்டராக குறைந்துள்ளது. இந்த குறைவிற்கு பல காரணங்கள்
இருந்தாலும் நீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் நெல் உற்பத்தித்
திறன் எக்டருக்கு 4.5 டன் அளவில் மட்டுமே உள்ளது. நெல் சாகுபடி திறனை விவசாயிகள் அதிகரிக்க
வேண்டியது அவசியம்.
