ிதை முளைப்புத் திறனை அறிந்து விவசாயிகள் நிறைந்த லாபம் பெறலாம் என்று திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் மூ.மு. முகம்மது காசீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயத்தின் அடிப்படை இடுபொருளான விதை தரமானதாக இருந்தால்தான் அதைப் பயன்படுத்தி மகசூல் பெறும் விவசாயிகளின் மனதில் மகிழ்ச்சி பொங்கும். நல்விதை என்பது அதிக முளைப்புத் திறன் கொண்டதாகும். திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத் திறன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முளைப்புத் திறன் என்பது விதையானது உயிரும் வீரியமும் கொண்டு இயங்குவதைக் காட்டுவதாகும். நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதைக் குவியல்களில் இருந்து விதைக்கப்படும் விதை மூலம் நிறைவான பயிர் எண்ணிக்கையில் வயலில் பயிர்கள் செழித்து வளரும். ஆனால், அதே சமயம் முளைப்புத் திறன் குறைந்த விதைகளைப் பயன்படுத்தினால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயிர்கள் வளரும். அதனால் பயிர் மகசூல் பாதிக்கப்படும். விதைச்சட்டம் 1966 பிரிவு 7இன்படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச முளைப்புத் திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்காச்சோளம் - 90 சதவிகிதம், நெல், கொள்ளு, எள், சணப்பு - 80 சதவிகிதம், சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து - 75 சதவிகிதம், நிலக்கடலை, சூரியகாந்தி, கத்தரி, தக்காளி, முருங்கை, கீரை - 70 சதவிகிதம், பருத்தி, வெண்டை - 65 சதவிகிதம், பூசணி, புடலங்காய், தடியங்காய், பாகல், மிளகாய், சுரை, தர்பூசணி - 60 சதவிகிதம் முளைப்புத் திறன் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பயிர்களுக்கு ஏதுவான சூழ்நிலையில் விதையின் கரு முளைவிட்டு பின்னர் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பாகங்கள் உருவாகி இயல்பான செடியாவதற்குரிய திறனே முளைப்புத் திறன் ஆகும். முளைப்புத் திறன் சோதனையின்போது இயல்பானது, இயல்பற்றது, கடினமானது, உயிரற்றது என்று 4 வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தங்கள் விதைகளின் முளைப்புத் திறனை அறிந்துகொள்ள விதை மாதிரியுடன் ரூ.30 கட்டணமும் அனுப்பினால் விதைமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார் அவர்
thanks to dinamani