Thursday, June 24, 2010

சிறிய வெங்காயத்தில் அதிக மகசூல் பெற யோசனை


பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம்  சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் சி. சங்கர் யோசனை தெரிவித்துள்ளார்.    இதுகுறித்து அவர் வெளியட்ட செய்திக் குறிப்பு:
தற்போது விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயமானது 25  முதல் 30 நாள்கள் வயதுடையதாகும். இது மேலுரம் இடுவதற்கு  தகுந்த தருணமாகும். எனவே, விவசாயிகள் தங்களது வயலில்  கைகளால் களை எடுத்து, அதன்மீது மண் அணைத்து ஏக்கர்  ஒன்றுக்கு 26 கிலோ யூரியா உரத்தை 50 கிலோ வேப்பம்  புண்ணாக்குடன் அல்லது 58 கிலோ அம்மோனியம் சல்பேட் உரத்தை மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
இலை வழி ஊட்டம் அளிப்பதாக இருந்தால் 19:19:19 என்ற நீரில் கரையும் உரத்தை 1 லிட்டர் நீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து, காதி சோப்புக் கரைசல் அல்லது ஒட்டும் திரவம் லிட்டருக்கு அரை மில்லி லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும். இவ்வாறு செய்வதால், சிறிய வெங்காயத்தில் அதிக மகசூல் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.