எந்தப் பயிராக இருந்தாலும் தரமான விதைகளை தேர்ந்தெடுப்பது அவசியம். அதன் மூலமே நல்ல விளைச்சலை பெற முடியும்.
தரமான விதையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:
உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். சான்றட்டை, விவர அட்டையில் குறிப்பிட்டுள்ளவற்றை சரி பார்க்க வேண்டும். அதில், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், இனத்தூய்மை, முளைப்புத் திறன், பருவம், எந்த பகுதிக்கு உகந்தது போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
வாங்கும் விதைகளுக்கு உரிய ரசீது பெற வேண்டும். அதில், வாங்குபவரின் பெயர், விலாசம், தேதி, வாங்கிய விதையின் பெயர், ரகத்தின் பெயர், அளவு, விலை, குவியல் எண், காலாவதி மற்றும் வாங்குபவரின் கையொப்பம் இருத்தல் வேண்டும்.
விதை கொள்கலனில் உள்ள விவரங்களும், விற்பனை பட்டியலில் உள்ள விவரங்களும் சரியாக உள்ளனவா எனப் பார்த்து வாங்க வேண்டும்.
விதைப்பதற்கு முன்பு அருகில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளை பரிசோதனை செய்தல் நல்லது. இப்பரிசோதனை செய்வதற்கு ரூ.30 மட்டுமே செலவாகும்.
விதைகள் சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் விதைச் சான்றுத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேலூர் மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.