வாழையில் பொதுவாக ஒரு குழிக்கு ஒரு வாழைக் கன்றை நடவு செய்வதற்குப் பதிலாக ஒன்றுக்கும் மேற்பட்ட கன்றுகளை ஒரே இடத்தில் நடவு செய்வதற்கு அடர் நடவு முறை என்று பெயர்.
அடர் நடவு முறையில், ஒரு வரிசையிலுள்ள இரண்டு கன்றுகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை அதிகரித்தோ அல்லது இரு வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியைக் கூட்டிக் குறைத்தோ நடவு செய்யப்படுகிறது. இம் முறையில் கன்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.
சாகுபடிச் செலவைக் குறைப்பதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்து, அதிக நிகர லாபம் எடுப்பதற்கும் இம் முறை பரிந்துரை செய்யப்படுகிறது. தண்ணீர் மற்றும் இடப்படும் உரங்கள் வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது. ரொபஸ்டா, குட்டை கேலண்டிஸ், பூவன், ரஸ்தாளி, நேந்திரன் மற்றும் கற்பூர வள்ளி ரகங்கள் இம் முறையில் பரிந்துரை செய்யப்படுகின்றன.
இம் முறை குறித்து கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண முறையில் ஒரு குழிக்கு ஒரு கன்று நடலாம். அடர் நடவு முறையில் 3 கன்றுகள் நடலாம். சாதாரண முறையில் ஒரு ஹெக்டேருக்கு 2,500 கன்றுகள் நடலாம். அடர் நடவு முறையில் 5 ஆயிரம் கன்றுகள் நட முடியும். சாதாரண முறையில் ஒரு ஹெக்டேருக்கு 28.21 டன் மகசூல் மட்டுமே எடுக்க முடியும் ஆனால், அடர் நடவு முறையில் 38.31 டன் மகசூல் எடுக்கலாம். இதன் மூலம் மகசூல் அதிகரிப்பதால், வருவாய் அதிகரிக்கிறது. வாழை அடர் நடவு குறித்து மேலும் தகவல் பெற விருப்பமுள்ளவர்கள் போடி தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.