கல்பாக்கத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கரியச்சேரி. அவ்விடத்தைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். மனைவி திருமதி சபீதா ராணி தாவரவியல் பட்டம் பெற்றவர். 2000ம் வருடங்களில் அலுவலகப் பணி காரணமாக கிட்டத்திட்ட விவசாயம் கைவிடப்பட்டது.
சுனாமியின் கோரதாண்டவத்திற்கு இவரகள் கிராமம் ஆளாக, படிப்புச் சான்றிதழ் கூட மிச்சமின்றி அனைத்தையும் இழந்திருக்கின்றனர். மிச்சம் திரு பாலாஜியின் அலுவலகப் பணி மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சான்றிதழ்.
இயற்கையால் பாதிக்கப்பட்ட இந்தத் தம்பதியினர் இயற்கையை நம்பியதுதான் இவ்விடத்தின் திருப்பம். நீர் வடியாத இவர்கள் நிலத்தைச் சுற்றி பொக்லைன் கொண்டு தோண்டி ஆழமான வடிகால்களை அமைத்துள்ளனர்.
தற்பொழுது 4 மாடுகள், 3 கன்றுகள், 11 ஆடுகள், 40 கோழிகள் (கிரிராஜா, நாட்டுக்கோழி, வனராஜா), 5 வான்கோழிகள், 6 கின்னிக் கோழிகள், 14 காடை , 3 மணிலா வாத்துக்கள், 8 நாட்டு வாத்துக்கள், 16 காதல் பறவைகள், 6 ஆப்பிரிக்கன் கிளி, 10 காக்டைல் என்றும் சிறு கிளிகள் என்று அவர்கள் வாழ்விடத்தை இயற்கை கலை கட்டியிருக்கிறது.
தற்பொழுது 4 மாடுகள், 3 கன்றுகள், 11 ஆடுகள், 40 கோழிகள் (கிரிராஜா, நாட்டுக்கோழி, வனராஜா), 5 வான்கோழிகள், 6 கின்னிக் கோழிகள், 14 காடை , 3 மணிலா வாத்துக்கள், 8 நாட்டு வாத்துக்கள், 16 காதல் பறவைகள், 6 ஆப்பிரிக்கன் கிளி, 10 காக்டைல் என்றும் சிறு கிளிகள் என்று அவர்கள் வாழ்விடத்தை இயற்கை கலை கட்டியிருக்கிறது.
கிராமியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று தங்காளால் ஆன பங்களிப்பைச் செய்யும் இவர்கள் “நமது விவசாயிகள் ஒவ்வொருவரும் தினசரி வருமானம், வார வருமானம், வருட வருமானம் என்று தங்கள் நிலங்களில் இருந்து எடுத்தால்தான் தற்சார்புடன் வாழ இயலும்” என்று கூறுகின்றனர்.
இதற்கான முறைகள்
- பால், முட்டை, கீரை – இவைகளிலிருந்து தின வருமானம்
- கொடி வகை (பீர்க்கன், பாகல், புடல்) – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
- தென்னை, கறிவேப்பிலை – இரு மாதங்களுக்கு ஒரு முறை
- பப்பாளி, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை – கூடிய காலஇடைவெளி
- மா, பலா போன்றவை – வருட வருமானம்
- பயன்தரு மரங்கள் – பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருத்த வருமானம்.
சொல்வதுடன் மட்டுமல்லாமல் செயல் படுத்தியும் உள்ளனர்.
பள்ளிகளில் செயல்முறை விளக்கங்கள், சிறுவர் சிறுமியர்களுக்கு சிறு பயிற்சிகள் என்று சமூக சிந்தனையுடன் செயல்படும் இவர்கள் தங்கள் ஊர் பள்ளியை சுற்றுச்சூழல் நட்புப் (eco friendly) பள்ளியாக மாற்றியருக்கின்றனர். எடுத்த சில பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், இயற்கைவிவசாயத்தை விடாமல் தொடர்ந்திருக்கின்றனர்.
இவர்கள் தோட்டத்தில் விளையும் பச்சைப் பயிறு, காய்கறிகள், அரிசி, இலைகளை கல்பாக்கத்திலேயே விற்றுவிடுகின்றனர். இவர்களிடம்அசோலா குழி ஒன்று உள்ளது. கால்நடைகளுக்குத் தீவனமாக அதை அளிக்கின்றனர். நெல் சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் இந்த அசோலாவை விரும்பி உண்கின்றனர்.
இவர்கள் பயிர் பாதுகாப்பிற்கு இஞ்சி – பூண்டு கசாயம், பஞ்ச கவ்யாபோன்றவைகளைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். அவை தவிர அசிட்டோபாக்ட்டர் (கறுப்பு யூரியா), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், மொபலைசர், சூடோமொனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பி.டி, கிரப்நில் போன்ற உயிரியல் இடுபொருட்களைப்பயன்படுத்துகின்றனர்.
மீன் வளர்ப்பிலும் கால் வைத்துள்ளனர். இவர்களது கிணற்றில் வலை இறக்கி (மிதவை போல) 50 விரால் குஞ்சு விட உள்ளனர். வீட்டிற்கு முன் உள்ள குட்டையில் 200 கட்லாவும் 200 காமன் கார்ப்பும் உள்ளன. இவைகளுக்கு பச்சரிசித் தவிடு, புண்ணாக்கு போன்றவை கொடுத்து வளர்த்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பிற்கும், மீன் வளர்ப்பிற்கும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்திலிருந்து (KVK) ஆலோசனை மையத்திலிருந்து ஆலோசனை பெறுகின்றனர்.
இவர்கள் செய்த வேர்க்கடலை சாகுபடியில் செலவு போக ஏக்கருக்கு 12000 கிடைத்துள்ளது; ஏக்கருக்கு 25 மூட்டைகள் (75 கிலோ) கிடைத்துள்ளன. ஸ்வீட் கார்ன்-ஐக் கூட இவர்கள் விடவில்லை. இது தவிற இயந்திர நடவில் பொன்னி, ADT 43, ADT 37 (குண்டு அரிசி), சீரகச் சம்பா, சிவப்புக் கார், அன்னம் (புதிய ரகம்) போன்றவற்றையும் சாகுபடி செய்கின்றனர்.
சாண எரிவாயு வைத்துள்ளனர். ஸ்லரியை பஞ்ச கவ்யா தயாரிக்கவும் உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.
வயல் வரப்போரங்களில் வெட்டிவேர், லெமன் கிராஸ், கோ4, அவுரி,சணப்பு, க்ளைரிசீடியா என்ற பெரும்பாலும் கால்நடைகளுக்கு உதவும் தீவன வகைகளைச் சாகுபடி செய்துள்ளனர்.
தங்களைப் பார்த்து மற்றவர்களும் இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் என்று நினைக்கும் இவர்களின் செயலில் லாப நோக்கும் இல்லை. வியாபார உத்தியும் இல்லை. நூறு சதவீத சேவை மட்டுமே.