Saturday, October 13, 2012

பருத்தி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு


உழவியல் முறைகள்:
  • கோடையில் உழுதல் – பூச்சிகளின் முட்டை மற்றும் புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அழியும்.
  • அமில விதை நேர்த்தி செய்த விதைகளை பயன்படுத்துதல்.
  • பூஞ்சாண உயிர்கொல்லி டிரைக்கோடெர்மா விதைநேர்த்தி செய்தல் (1 கிலோ விதைக்கு 3 கிராம் வீதம்).
  • உயிர் உரமான அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்தல் (ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட்டுகள் (200கிராம் ஒரு பாக்கெட் எடை)).
  • வேப்பம் புண்ணாக்கு இடுதல் (100 கிலோ/ஏக்).
  • பொறிப்பயிர்கள் முறையே சூரியகாந்தி, சாமந்தி பயிரிடுதல்.
  • உயர் விளைச்சல் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட ரகங்களை பயிரிடுதல்.
  • ஊடுபயிராக உளுந்து மற்றும் பாசிப்பயிர் பயிரிடுதல்.
  • தரம் வாய்ந்த மற்றும் சான்று பெற்ற விதைகளை விதைத்தல்.
  • கிராமம் முழுவதும் ஒரே ரகமான விதைகளை விதைத்தல்.
  • தோட்டக்கால் சால் முறையில் பருத்தி விதையை விதைத்தல்.
  • வரப்பு பயிர்கள் மக்காச்சோளம், சோளம் மற்றும் ஆமணக்கு பயிரிடுதல்.
  • பருத்தி மறுதாம்பு பயிர் விடுதலை தவிர்த்தல்.
கைவினை முறைகள்:
  • விளக்கு பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்கருக்கு).
  • இனக்கவர்ச்சிப்பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்).
  • கருநீலத்துணி விரித்தல் (2 சதுர அடி அளவில் 10 இடங்களில் / ஏக்).
  • முட்டை மற்றும் புழுக்கள் துணியின் அடியில் தங்குவதால் அதை சேகரித்து அழிக்கலாம்.
  • மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்தல் (5 எண்ணம்/ஏக்).
  • “டி’ வடிவ குச்சியை நடுதல் (6 எண்ணம்/ஏக்) இந்த குச்சியில் பறவைகள் அமர்ந்து புழுக்களை கண்காணித்து அதை உண்டுவிடும்.
  • பருத்தியை தாக்கும் பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் கூட்டுப் புழுக்களை சேகரித்து அழித்தல். பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட காய்கள், சப்பைகள், பூக்கள் மற்றும் இதர உதிர்ந்த பொருட்களை அகற்றி அழித்துவிடுதல்
உயிரியல் முறைகள்:
  • காய்ப்புழுவை கட்டுப்படுத்த 200மிலி என்.பி.வி. வைரஸ்/ஏக் தெளித்தல்.
  • தூரிசைடு (பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்) ஏக்கருக்கு 300 கிராம் தெளித்தல்.
நன்மை செய்யும் பூச்சிகள்:
  • டிரைக்கோகிரம்மா முட்டை அட்டையைப் பொருத்துதல் (ஏக்கருக்கு 4 சிசி சி40 துண்டு அட்டைகள்).
  • கிரைசோபா ஊன் உண்ணி ஏக்கருக்கு 5000 வெளியிடுதல்.
  • ஊன் உண்ணி ரெடுவிட் நாவாய்பூச்சி ஏக்கருக்கு 2000 வெளியிடுதல்.
  • முட்டை, புழு, ஒட்டுண்ணி சேலோனஸ் பிளாக்பர்னி ஏக்கருக்கு 5000 வெளியிடுதல்.
ரசாயன முறைகள்:
பருத்தி வயலில் பயிரைத் தாக்கும் பல பூச்சிகளின் பொருளாதார சேத நிலையைப் பின்பற்றி அதற்கேற்றவாறு பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.
வ.எண்.பூச்சிகள்பொருளாதார சேதநிலை
1இலைப்பேன்இலைக்கு 2 பூச்சிகள்
2தத்துப்பூச்சிஇலைக்கு 2 பூச்சிகள்
3அசுவினி15 முதல் 20% வரை தாக்கப்பட்ட செடிகள்
4பயிர்ச்சிலந்தி1 சதுர செ.மீ.க்கு 10 சிலந்தி பூச்சிகள்
5காய்ப்புழு10% தாக்கப்பட்ட காய்கள்
6வெள்ளை ஈஒரு இலைக்கு 5 முதல் 10 வெள்ளை ஈ
7புரோடினியா புழு50 மீட்டர் நீளத்தில் 4 முட்டை குவியல்கள்
8தண்டுக் கூன்வண்டு10% தாக்கப்பட்ட செடிகள்
மேற்கண்ட அட்டவணையில் உள்ள பொருளாதார சேதநிலையை தாண்டிவிட்டால் கீழே உள்ள பாதுகாப்பான ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
  1. எண்டோசல்பான் 250மிலி மற்றும் பாசலோன் 100மிலி/ஏக். தெளித்தல்.
  2. வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி அசாடிராக்டின் ஏக்கருக்கு 200மிலி தெளித்தல்.
  3. கார்போபியூரான் குருணை ஏக்கருக்கு 12 கிலோ இடுதல்.
பூச்சிக்கொல்லிகளை மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். பகல் நேரங்களில் தெளித்தால் சூரிய ஒளியில் பூச்சிக்கொல்லிகள் ஆவியாகிவிடுவதோடு மட்டுமல்லாமல் புழு மற்றும் பூச்சிகள் இலைக்கு அடியில் போய் மறைந்துகொள்ளும். மேலும் மாலை நேரங்களில் புழு மற்றும் பூச்சிகள் வெளியில் வரும். அப்போது தெளித்தால் உடனே அழிந்துவிடும்.
ஒரே பூச்சிக்கொல்லி திரும்பத்திரும்ப பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிக்கு கட்டுப்படவில்லை என்றால் மற்றொன்றை பயன்படுத்த வேண்டும்.