பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் வழியாக 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. முதல் கட்டமாக கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு இம்மாதம் 9-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி, பாபநாசம் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் தண்ணீரைத் திறந்துவிட்டார். மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 86,107 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்காக முதல்வர் ஜெயலலிதா தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாபநாசம் அணையில் இருந்து தாமிரவருணி பாசனத்தில் பிசான சாகுபடி பணிகளைத் தொடங்க 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற 31.03.2013 வரை 137 நாள்களுக்கு தண்ணீர் வழங்கப்படும்.
86,107 ஏக்கர்: இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் வழியாக 40,000 ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய், தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய் ஆகிய 4 கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும். தேவையைப் பொறுத்து விவசாயத்துக்கு கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் ஜெகநாதன், தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன், அணை செயற்பொறியாளர் ஜார்ஜ் செல்வமணி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோஹ்னி ராம்தாஸ், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 283.80 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 89.63 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 63.10 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 66 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகில் 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 72.10 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 76.50 அடியாகவும் இருந்தது.
