ஆலங்குளம் வட்டாரத்துக்கு உபட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயறுவகை பயிர்களில்,இலைவழி உரம் தெளிக்குமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
ஆலங்குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட ஊத்துமலை,மருக்கலாங்குளம்,பலபத்திர ராமபுரம்,மேல மருதப்பபுரம்,காவலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும்,சுற்றுவட்டார பகுதிகளிலும் உளுந்து,பாசிப்பயறு,தட்டைப்பயறு போன்ற பயறுவகை பயிர்கள் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவிற்கு மேல் தற்போது மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பயறுவகை பயிர்களில் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதிக வருமானம் அடைந்திட,இலைவழி உரமாக டி.ஏ.பி. 2 சதவீத கரைசலும் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் உற்பத்தியாகும் பயறு வகைகளைத் தெளித்து பயனடையுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இ.வ.நா.முத்துஎழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
டி.ஏ.பி. 2 சதவீத கரைசல் தெளிக்க ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை முதல்நாள் காலை ஊறவைத்து, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குச்சி கொண்டு கலக்கி விடவும். பின்பு மறுநாள் தெளிந்த நீரை 200 லிட்டர் நீரில் கலந்து செடிமுழுவதும் நனையும்படியும்,கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
அதாவது இதேபோல் பூக்கும் போது ஒரு தடவையும்,15 நாள் கழித்து ஒருமுறையும் தெளிக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு வேளாண் மை பல்கலைகழக பயறு ஒண்டர் 5 கிலோ ஒரு எக்டர் பயறு செடிகளுக்கு 500 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூப்பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும் என்றார் அவர்.
