Friday, November 30, 2012

போதிய மழையின்மையால் திருந்திய நெல் சாகுபடி: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் இரா. செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 பிசான நெல் சாகுபடி பருவத்துக்கு வழக்கமாக கிடைக்கும் வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு இதுவரை போதிய அளவு கிடைக்கவில்லை. 30 முதல் 40 சதவீதம்வரை மட்டுமே கிடைத்துள்ளது. அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது.

 இதனால், அதிக இடங்களில் நாற்றுவிடவும், நடவு செய்யவும் இயலாமல் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளது. பயிர்களை இறுதிவரைக் காப்பாற்றவும் உறுதி இல்லாத நிலையில் போதிய நீராதாரம் இல்லை.

 இந்நிலையில், நீராதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்த கண்டறியப்பட்ட வழிமுறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறை மிகவும் பயன் தரும்.

 10 நாள் நாற்றுகளை நடவு செய்தல், 9-க்கு 9 இஞ்ச் இடைவெளியில் நாற்று நடுதல், 1 இஞ்ச் உயர அளவுக்கு மட்டுமே நீர்ப்பாய்ச்சுதல், கோனாவீடர் அல்லது பரவ் வீடர் (எந்திரக் களையெடுப்புக் கருவி) மூலம் களைகளை வயலில் மக்கச் செய்தல் ஆகிய 4 வழிமுறைகளும் பயன் தரும்.

 இதனால், இளம் நாற்றுகள் பிடுங்கி நடுதல் முறையில் ஏற்படும் வாடித் தழைத்தல் நிலைமை தவிர்க்கப்படும்.

 கலப்பாக நடுவதால் அதிக சூரிய ஒளி கிடைத்தல், களை இயந்திரம் பயன்படுத்த ஏதுவான சூழ்நிலை கிடைக்கும். 1 இஞ்ச் உயரத்துக்கு நீர் கட்டுவதால் நிலத்தடி காற்றோட்டம், வேர்கள் சுவாசம், வேர் அழுகுதல் தவிர்க்கப்படும். அதிக தூர்கள் கட்டுதல், அதிக பயனுள்ள தூர்கள், எலி, புகையான் தாக்குதல் குறைவு, அதிக வேர் வளர்ச்சி களைகளால் நிலப்போர்வை அமைதல், நிலத்தில் நுண்ணுயிர்கள் செயல்பாடு அதிகரித்தல், நிறைவாக மகசூலும் கிடைக்கும்.

 அதிக இடங்களில் நாற்று பாவப்பட்டு 20 நாள் ஆன நிலையில் திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச் சூழ்நிலையில் நாற்று குறித்து பெரிதாக எண்ண வேண்டாம். அதிக இடைவெளியில் வரிசை நடவு, குறைந்த அளவு நீர் பாய்ச்சல் முறையில் வயல் பராமரிப்பு, களையெடுப்புக் கருவிகள் மூலம் களைகளை மக்கச் செய்தல் ஆகிய முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்தால் அதிக பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.