Friday, November 30, 2012

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விளைந்த மக்காச்சோளப் பயிர்: ஆட்சியர் பார்வையிட்டார்

திருந்திய நெல் சாகுபடி மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விளைந்த மக்காச்சோள பயிர்களை, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வேளாண் விவசாய நிலங்களில், தற்போது நவீன முறையில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் மக்காச்சோள பயிர்களை, மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து, விவசாயிகளைப் பாராட்டினார்.

 குட்டத்துப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கோவில்பட்டி கிராமத்தில், 37 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் இம்முறை விவசாயம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, வேளாண் அதிகாரிகளிடம் விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஆட்சியர்.

 மேலும், விவசாயி பாண்டியிடம் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட்டால் கோனோவீடர் கருவியைக் கொண்டு எப்படி களை எடுப்பது என்று ஆட்சியர் கேட்டார். அதற்கு, விவசாயி அளித்த பதிலில் ஆட்சியர் திருப்தி அடைந்தார்.

 பின்னர், செம்மடைப்பட்டி பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரை பார்வையிட்டார். விவசாயி சின்னச்சாமியிடம் சொட்டு நீர்ப் பாசனத்தில் தண்ணீர் எவ்வளவு செலவாகிறது என்றும், மக்காச்சோள கதிர்கள் நன்கு விளைகிறதா எனவும் கேட்டபோது, குறைந்த தண்ணீரில் அதிக மகசூலைப் பெறலாம் என்றார் அந்த விவசாயி.

 இந்த ஆய்வில், திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சம்பத் குமார், துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை உழவர் பயிற்சி நிலைய இணை இயக்குநர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட தரக்கட்டுபாடு வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயராணி மற்றும் வேளாண் அலுவலர்கள் இரா.ப. மோகன்குமார், துணை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராமச்சந்திரன், முத்துச்சாமி, ஜாபர்சாதிக், பத்ரிநாராயணன், அட்மா திட்ட அலுவலர்கள் என பலர்பங்கேற்றனர்.