பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தினால் கூடுதல் மகசூல் பெறலாம் என்றார் கோயம்புத்தூர் விதைச்சான்று இணை இயக்குநர் தங்கராசு.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் விதைச்சான்று திட்டப்பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திலும், வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் குடிக்காடு கிராமத்தில் விவசாயி மணிகண்டன் வயலில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை வி.ஆ.ஐ- 2 சான்று நிலை விதைப்பண்ணையையும் ஆய்வு செய்த பின்னர் கூறியது: விவசாயத்தில் விதை முக்கிய இடு பொருளாக இருப்பதால், சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆர்வமுடன் விதை உற்பத்தியாளராக மாற வேண்டும். தங்களுக்கு தேவையான விதையை உரிய உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும் போது 20 சதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். சான்று விதை உற்பத்தி பயிற்சியை பெறும் விவசாயிகள், சிறந்த முறையில் விவசாயம் செய்து பயன் பெறலாம் என்றார் அவர். ஆய்வின்போது, விதைச் சான்று உதவி இயக்குநர் முரளிதரன், விதைச் சான்று அலுவலர் பழனிச்சாமி, விதை பரிசோதனை அலுவலர்கள் தெய்வீகன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.