Saturday, December 1, 2012

திராட்சை விற்பனையில் இடைத் தரகர்கள் குறுக்கீடு: பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள் அதிருப்தி

       திராட்சை விற்பனையில் இடைத் தரகர்கள் குறுக்கீடு குறித்து காவல் துறையினர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

     கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. திராட்சை பழங்களை மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளியூர் வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்வதில் இடைத் தரகர்கள் குறுக்கீடு அதிகரித்துள்ளதாகவும், உற்பத்திப் பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு தடை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்து, திராட்சை விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

     இந்த மனுவின் மீது காவல் துறை மூலம் விசாரணை நடத்தி, பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
 அதன்படி கம்பத்தில், காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், விவசாயிகள், வியாபாரிகள், கமிஷன் ஏஜென்ட்டுகள், லாரி உரிமையாளர்கள் ஆகியோர் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

       வியாபாரிகளுக்கு நேரடியாக அனுப்பும் சரக்கை லாரிகளில் ஏற்றுவதில்லை என்று விவசாயிகள் புகார் கூறினர். முன்பதிவு, வாடிக்கை, முன்பணம் ஆகியவற்றின் அடிப்பையிலேயே லாரிகள் இயக்கப்படுவதால், விவசாயிகள் அவ்வப்போது அனுப்பும் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடிவதில்லை என்று, லாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே நேரடியாக நடக்கும் வர்த்தகத்தில் தலையிடுவதில்லை என்று கமிஷன் ஏஜென்ட்டுகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

       இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, காவல் துறையினர் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை, பிரச்னைக்குத் தீர்வையும், விவசாயிகளுக்கு சாதகமான முடிவையும் ஏற்படுத்தவில்லை என்று, விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

 சுருளிப்பட்டி திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கி. முகுந்தன் கூறியது: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஒரு ஆண்டுக்கு ரூ. 78 கோடி வரை திராட்சை வர்த்தகம் நடைபெறுகிறது. வெளியூர் வியாபாரிகளை மாவட்டத்துக்கு நேரடியாக வரவழைத்தும், இணையதளம் மூலமும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப திராட்சை பழங்களை விற்பனை செய்வதற்கும், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு விவசாயிகள் நேரடியாக பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் வாகன வசதி செய்து தர, வேளாண்மை வணிகத் துறை மூலம் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.