திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நெல் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
ஏடிடி 45 ரகத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பழனிவேல் நிலத்தில் இந்த விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதை, நாமக்கல் மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குநர் ஆர். சுப்பிரமணியம் சனிக்கிழமை ஆய்வு செய்தார். எலச்சிபாளையம் வேளாண் உதவி இயக்குநர் முரளிதரன் மற்றும் நாமக்கல் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் நெல் விதை குறித்து சுப்பிரமணியம் கூறியது: நெல் பயிரில் கோனோவீடர் கருவியைப் பயன்படுத்தி நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40 நாள்களில் களை எடுக்கும்போது, பயிருக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து தூர்கள் அதிகரிப்பதால் மகசூல் கூடுகிறது. களைகள் மண்ணோடு மக்கச் செய்வதால் பயிருக்கு தேவையான சத்து கிடைத்து உரச் செலவு குறைகிறது.
மேலும், இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த தழைச் சத்தை பரிந்துரைக்கு மேல் இடுவதை தவிர்த்து, பயிருக்கு அளிக்கும் தழைச் சத்தினை மூன்று முறையாக பிரித்து இட வேண்டும்.
இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் ஏக்கருக்கு 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது மானோ குரோட்டோபாஸ் 400 மிலி அல்லது குளோரிபைபாஸ் 500 மிலி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.
இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் ஏக்கருக்கு 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது மானோ குரோட்டோபாஸ் 400 மிலி அல்லது குளோரிபைபாஸ் 500 மிலி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார் அவர்.
உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் முக்கியத்துவம் குறித்து உதவி இயக்குநர் ஜெகதீசன் பேசினார். திருந்திய நெல் சாகுபடி முறை தொழில்நுட்பம் குறித்து வேளாண் உதவி இயக்குநர் முரளிதரன் விளக்கினார். ஆயிவின் போது வேளாண அலுவலர் கோமதி, துணை வேளாண் அலுவலர் தர்மலிங்கம், உதவி வேளாண் அலுவலர்கள் செந்தில், குழந்தைவேல் ஆகியோர் உடனிருந்தனர். திரளான விவசாயிகளும் பங்கேற்றனர்.