Monday, December 10, 2012

டெல்டா மாவட்டங்களை ஏமாற்றியது பருவமழை

நிகழாண்டு காவிரியில் தண்ணீர் வராத நிலையில், டெல்டா மாவட்டங்களில் பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழை அளவு 1,306 மி.மீ. ஆனால், நிகழாண்டு இதுவரை 690.78 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை நிகழாண்டு குறைவாக பெய்தது. மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் இயல்பான அளவு 296 மி.மீ. ஆனால், நிகழாண்டில் சராசரியாக 226.92 மி.மீ. மட்டுமே பெய்தது. இதுவும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டுமே ஓரளவுக்கு கணிசமான அளவுக்குப் பெய்தது. ஆகஸ்ட் மாதத்தில் 82.92 மி.மீ., செப்டம்பரில் 102.03 மி.மீ. மழையளவு பதிவானது.

வடகிழக்குப் பருவமழையும் அக்டோபர் மாத பிற்பகுதியில் மட்டுமே எதிர்பார்த்த அளவுக்கு இருந்தது. அப்போது, பல இடங்களில் இளம் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அளவுக்குத் தொடர் மழை பெய்தது.

அக்டோபர் மாதத்தில் சராசரியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 341.28 மி.மீ., நாகை மாவட்டத்தில் 626.06 மி.மீ., திருவாரூர் மாவட்டத்தில் 531.77 மி.மீ. மழை பெய்தது. இதில், மாநிலத்திலேயே அதிக மழையளவு பட்டியலில் நாகை மாவட்டம் முதலிடத்திலும், திருவாரூர் மாவட்டம் இரண்டாமிடத்திலும் இருந்தன.

ஆனால், நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் 92.91 மி.மீ. மட்டுமே பெய்தது. இது, இயல்பான மழையளவை (288 மீ.மீ.) விட 196.91 மி.மீ. குறைவு. டிசம்பர் மாதத்தில் இயல்பான மழையளவான 164 மி.மீ.க்கு பதிலாக இதுவரை 1.6 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

எனவே, வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்தவரையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 651 மி.மீ.க்குப் பதிலாக இதுவரை 435.88 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் 826.93 மி.மீ., திருவாரூர் மாவட்டத்தில் 755.93 மி.மீ. பெய்தது. ஆனால், நிகழாண்டில் நாகை மாவட்டத்தில் 741.56 மி.மீ., திருவாரூர் மாவட்டத்தில் 636.67 மி.மீ. மட்டுமே மழையளவு பதிவானது. இவற்றில், அதிக அளவு அக்டோபர் மாத பிற்பகுதியில் பெய்தது.


 இதுகுறித்து தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையைச் சேர்ந்த வ. பழனியப்பன் தெரிவித்தது: டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே அதிக அளவில் பெய்துவிட்டது. இனிமேல் மழை பெய்தாலும் பயிருக்குப் பயனுள்ளதாக இருக்காது.

பயிர்கள் பூக்கும் தருணமான டிசம்பர் இறுதியில் மழை பெய்தால், பூக்கள் கொட்டிவிடும். இதனால், மகசூலில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதேபோல, 2010 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டது என்றார் பழனியப்பன்.

எனவே, நிகழாண்டில் காவிரியில் நீர்வரத்து இல்லாததுடன், பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்துள்ள சம்பா பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன.

பல இடங்களில் சம்பா பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் இல்லாததால் வெடிப்பு காணப்படுவதுடன், பயிர்களும் பசுமை நிறத்திலிருந்து, மஞ்சள் நிறத்துக்கு மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.