Wednesday, December 5, 2012

கருகிய பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரிக்கை

     மழையின்றி வறண்டு காணப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திங்கள்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

         கோவில்பட்டி முத்தலாபுரம் குறுவட்டத்துக்குள்பட்ட மேலக்கரந்தையில் ஆயிரக்கணக்கான மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.

      மானாவாரி விவசாய நிலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் இறுதியில் பெய்யும் பருவ மழைக்கு பயிர் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடைசி வாரத்தில் லேசான மழை பெய்தது.

       அம்மழைக்கு விதைத்துவிட்டோம். தீபாவளிக்கு மழை பெய்யும் என காத்திருந்தோம். ஆனால் பொய்த்துவிட்டது. கார்த்திகை 17-ம் தேதி வரை மழை பெய்யவில்லை. எனவே, மேற்கண்ட பயிர்களுக்கான முதிர்வு காலம் நெருங்கிவிட்டதால் செடிகளில் மணி கட்டவில்லை.

        போதிய ஈரத்தன்மை நிலங்களில் இல்லை. கடந்த காலங்களில் பெய்த அதிக மழைக்கு பயிர்கள் மூழ்கின. தற்போது மழையே இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன.முத்தலாபுரம் சுற்று வட்டாரத்தில் மேலக்கரந்தை மற்றும் சுற்று வட்டாரங்களில் வேளாண்மைத் துறையினர் பயிர்களைப் பார்வையிட்டு, அரசுக்கு இழப்பீட்டுத் தொகை சம்பந்தமாக பரிந்துரைக்க வேண்டும். கிராமத்தில் கால்நடைகளுக்கு குடிக்க குளம், குட்டைகளில் கூட தண்ணீர் கிடையாது.

      ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது நிலத்தில் முதலீடு செய்துள்ளார்கள். தற்போது மழை  பெய்தாலும் இனி விளைச்சல் கொடுக்காது.

       எனவே, உடனடியாக விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் வறட்சி நிவாரணமாக அரசு வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசனிடம் அளித்தனர்.

       இதில், மேலக்கரந்தை ஊராட்சித் தலைவி மாரீஸ்வரி, மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் அ.வரதராஜன் உள்பட விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.