Tuesday, December 4, 2012

நீரில்லாத எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம்: நிம்மதியிழந்த விவசாயிகள்

     ஓட்டப்பிடாரம் வட்டம், எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் நீர் இல்லாததால் விவசாயிகள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். பருவமழை பொய்த்துவிட்டதால் இதுவரை இல்லாத சோகத்தை அனுபவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

      தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கம் என்ற பெருமை எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்துக்கு உண்டு. இங்கு தேங்கும் நீரைக் கொண்டு ஆண்டுதோறும் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

 கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை அடிவாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீரும், கயத்தாறு வடபகுதியில் பெய்யும் மழை நீரும் ஓடைகள் வழியாக வந்து இந்த நீர்த்தேக்கத்தை நிரப்பும்.

     நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாகத் திறக்கப்படும் தண்ணீர் காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளுர், முத்துகுமாரபுரம், வேடநத்தம், வேப்பலோடை வழியாக கடலைச் சென்றடையும். இதற்கிடையே ஏராளமான மானாவாரிக் குளங்களும் நீரைப் பங்கிட்டுக் கொள்வதுண்டு.

 இந்த ஆண்டும் நீர்த்தேக்கம் நிறைந்துவிடும் என நம்பிய விவசாயிகள், கோடை உழவு மற்றும் முன் உழவுப் பணிகளை முடித்து நாற்றங்கால் அமைத்தனர்.

     ஆனால், போதிய மழையின்மையால் நீர்த்தேக்க நீரை நாற்றங்காலுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 10 நாள்களுக்கு கூட போதிய நீர் கிடைக்காமல் நாற்றுகள் வாடி வருகின்றன. தொழி உழவு உள்ளிட்டப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
 பருவத்தில் பலமாக இல்லாமல் லேசாக மட்டுமே பெய்த மழையால் கரிசல் நிலத்தில் பயிரிடப்பட்ட மானாவாரிப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, சோளம், மக்காச்சோளம், எள் போன்றவை மட்டுமே தாக்குப்பிடித்து வளர்கின்றன. செம்மண் பரப்பில் பயிரிடப்பட்ட மானாவாரிப் பயிர்கள் கருகிவிட்டன.

      இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பருவமழை நேரத்தில் முதலிலும், கடைசியிலும் என இரண்டு முறை நீர்த்தேக்கம் நிரம்பினால்தான் ஒரு முறையாவது நெல் சாகுபடி செய்ய முடியும். ஆனால், இந்த ஆண்டைப் போன்ற நிலை, எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்துக்கு வந்தது இல்லை. ஏற்கெனவே 10 அடி வரை மண் மேடாக உயர்ந்துவிட்டது. அதனை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

      பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இருபோக சாகுபடி நடைபெற்று வந்த இப் பகுதிகளில், இப்போது ஒருபோக சாகுபடிக்கும் தண்ணீர் இல்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

    நீர்த்தேக்கத்தில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல சிமென்ட் வாய்க்கால் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்தப் பணியையும் சரியாகச் செய்யாததால் அவை சிதிலமடைந்துவிட்டன.

 நிலத்தடி நீரைக் கொண்டு பயிர் செய்யலாம் என்றால் அதுவும் இப்போது அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பருவமழை காக்கத் தவறிவிட்டதால், தமிழக அரசு விவசாயிகளைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்றனர் விவசாயிகள்.