விவசாயக் கிணறுகளில் இருந்து லாரிகள் மூலமாக தண்ணீரை எடுத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதி விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கோட்டாட்சியர் சு.முருகையா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்துக்குளி பி.எஸ்.மணி: வடமுகம் காங்கயம்பாளையத்தில் தனியார் அனல் மின் நிலையம் அமைக்க அரசு அனுமதிக்கக் கூடாது.
இதுதொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மக்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சி.பொன்னுசாமி: திருப்பூர் தாலுகாவில் வடக்கு, தெற்கு, அவிநாசிபாளையம் என 3 உள்வட்டங்களாக நில அளவைத் துறை செயல்படுகிறது. வடக்கு, தெற்கு உள்வட்டங்களுக்கு சர்வேயர்கள் இல்லை. எனவே இந்த உள்வட்டங்களுக்கு உடனடியாக சர்வேயர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கே.சி.எம்.பாலசுப்பிரமணியம்: அதிகரித்து வரும் பாம்புகள், மயில்கள், மான்களால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பானவர்கள் அல்ல. அதேசமயம், இத்தகைய விலங்கினங்களால் விவசாயம் அழிந்து வருகிறது என்பதை கவனத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதபாளையம் பகுதியில் மான்களால், சுற்றுப் பகுதி விவசாய நிலங்களில் பயிர்கள் சேதமடைகின்றன. இதற்காக வனத்துறை விவசாயிகளுக்கு இழப்பீடு தருகிறது. இது நீரந்தரத் தீர்வாக இருக்காது. மான்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயக் கிணறுகளில் இருந்து லாரி மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. 3-வது குடிநீர் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. பொது பயன்பாட்டுக்கு தண்ணீர் விலைக்கு வழங்கப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும்.
பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் பழைய சுடுகாட்டை சீர்படுத்தவும், அவிநாசி வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் வாழைக்காய் ஏலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்ட கோட்டாட்சியருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.