Friday, June 14, 2013

நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க நீடித்த நவீன கரும்பு சாகுபடி

தமிழகத்தில் கரும்புசாகுபடி சராசரியாக 3.1 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 325 லட்சம் டன் கரும்பும், 24 லட்சம் டன் சர்க்கரையும் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. தமிழகத்தில் தற்போது 42 சர்க்கரை ஆலைகள் மூலம் சுமார் 50 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எக்டருக்கு 105 டன் என்ற அளவில் விளைச்சல் உள்ளது.

   கரும்பு சாகுபடியில் தற்போது உள்ள இடுபொருள் செலவை குறைத்து மகசூல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிடவும், அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையை சமாளித்து கரும்பு உற்பத்தியை பெருக்க நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்ப முறையை விவசாயிகள் பின்பற்ர வேண்டியது அவசியம். முன்பு கரணை முறையில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக குழித்தட்டு முறையில்  உருவாக்கப்பட்ட நாற்றுகளை கொண்டு சாகுபடி செய்யும் முறைதான் நீடித்த கரும்பு சாகுபடி முறையாகும். நீடித்த நவீன கரும்பு சாகுபடி  தொழில்நுட்பம் கடந்த 2010 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு, தற்போது விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

   இந்தமுறை கரும்பு சாகுபடி ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சியாகும். இந்த முறையில்  விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கபட்டுள்ளது. குழித்தட்டில் விதைப்பருக்களை இட்டு நாற்றுகளாக பசுமைக்குடிலில் 25 முதல் 30 நாட்கள் வளர்க்க வேண்டும். பின், அவற்றை எடுத்து 5 க்கு 2 அடி என்ற இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். சொட்டு நீர் பாசனம் மூலம் இவற்றுக்கு நீர்ப்பாய்ச்சு, தகுந்த உரங்களை இட்டு பராமரித்து, குறிப்பிட்ட கால நிறைவுக்கு பின் அறுவடை செய்ய வேண்டும். கரணை முறை கரும்பு சாகுபடியில் எக்டருக்கு 100 டன் என்ற அளவில் விளைச்சல் கிடைத்தது. நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் எக்டருக்கு 175 முதல் 200 டன் வரை உற்பத்தி கிடைத்து வருகிறது.

   இதனால், நீரின் உபயோகத்திறன் குறைகிறது. சரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது. காற்று மற்றும் சூரிய ஒளி அதிகளவு பயிர்களுக்கு கிடைக்கின்றது. இதனால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கின்றது. மொத்த சாகுபடி செலவு குறைகின்றது. விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.


    மகசூல் அதிகரிக்கிறது. இந்த முறை குறித்த வேளாண்மை துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை அதிகாரிகளுக்கு முன்னரே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் மானியமும் அளிக்கப்படுகிறது. தற்போது கரும்பு ஒரு டன்னுக்கு ரூ 2100 முதல் ரூ.2300 வரை அரசு சார்பில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்துடன்  இணைந்து நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகள் பின்பற்றினால் உற்பத்தியை அதிகரித்து இலாபம் பெறலாம்.