Friday, June 14, 2013

பூசணியைத் தாக்கும் பூச்சிகள் தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்.

பூசணியைத் தாக்கும் பூச்சிகளில் பழ ஈ எனப்படும் பேக்ட்ரோசீரா குக்கர் பிட்டே, சிலியேட்டஸ், ஜீனேட்டா, பூசணி வண்டுகள் எனப்படும் அல்லோக்கா போரா பெவிகோலிஸ், இன்ட்டர் மீட்ய (நீலநிற வண்டு), சிங்கட்டா(சாம்பல் நிற வண்டு), தண்டு துளைப்பான் எனப்படும் மெல்லிட்டியா யூடிரியான், தண்டு வீக்க ஈ எனப்படும் நியோலெசியாப்டிரா பால்கேட்டா, புடலை காவடிப்புழு எனப்படும் ப்ளுசியா பெப்போனிஸ், பூசணி இலைப்புழு எனப்படும் டயபேனியா இண்டிகா ஆகிய புழுக்கள் முக்கியமானதாகும்.
   பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே(பழ ஈ) பூச்சி முட்டைப்பருவத்தில் காய்களின் மீது வெண்ணிற முட்டைகளை தனித்தனியாகவோ, பல எண்ணிக்கையிலோ இடும். இதன் புழு அழுக்கடைந்த வெண்ணிறத்தில் காணப்படும். கூட்டுப்புழு முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் மண்ணில் விழுந்து கூட்டுப்புழுவாக மாறுகிறது. இந்தப்பூச்சி தாக்கப்பட்ட பயிர்களின் காய்களில் இருந்து பழுப்பு நிறத்திரவம் வடியும். காய்கள் உருக்குலைந்து காணப்படும். காய்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பாகவே உதிர்ந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட அழுகிய காய்களை பறிந்து அழித்துவிட வேண்டும். உட்பரவல் உள்ள இடங்களில் விதைக்கும் காலத்தை மாற்றியமைத்து தாய் ஈக்களின் நடமாட்டம் வறண்ட, வெப்பமான காலங்களில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டுப்புழுக்களை உழவு செய்து மண்ணிலிருந்து வெளிக்கொணர்ந்து சேகரித்து அழிக்கலாம். கவர்ச்சிப்பொறிகளை வைத்தே ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். தேவையான தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

  
பூசணி வண்டுகள்  எனப்படும் அல்லோக்கோ போரா பெவிகோலிஸ்( சிவப்பு வண்டு), இன்ட்டர் மீட்ய (நீலநிற வண்டு), சிங்கட்டா(சாம்பல் நிற வண்டு) பூச்சிகள் முட்டையில் இருந்து வெளிவந்த புழுக்கள் அழுக்கடைந்த வெண்ணிறத்தில் காணப்படும். வளர்ந்த  புழுக்கள் வெளிமஞ்சள் நிறத்தில் காணப்படும். இவை வண்டினப்புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு வேர், தண்டு மற்றும் காய்களை சாப்பிட்டு சேதப்படுத்தும். வண்டுகள் இலை மற்றும் காய்களை சாப்பிட்டு சேதப்படுத்தும். இவற்றைக்கட்டுப்படுத்த அறுவடைக்குப் பின் நிலத்தை உழுது உறக்கத்தில் இருக்கும் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம். தேவையான தடுப்பு மருந்துகளை உபயோகிக்கலாம்.

       தண்டு துளைப்பான் எனப்படும் மெல்லிட்டியா யூடிரியான் பூச்சிகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் கூட்டுப்புழு மண் பட்டுக்கூட்டில், கூட்டுப்பருவத்திற்கு மண்ணில் செல்லும். இவை தாக்கும் பயிர்களின் செடியை புழுக்களுடன் சேகரித்து அழிக்கலாம். தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

      தண்டு வீக்க ஈ எனப்படும் நியோலே சியாப்டிரா பால்கேட்டா பூச்சிகள் கொசுவைப் போன்று உடல் சிறுத்து பழுப்பு நிறமாகக் காணப்படும். இதன் புழுக்கள் தண்டை குடைந்து தண்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். தகுந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி இவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

      புடலை காவடிப்புழு எனப்படும் ப்ளுசியா பெப்போனிஸ் பூச்சி வெள்ளை நிற உருண்டை வடிவ முட்டையை தனித்தனியாக இளம் இலைகளில் இடும். இதன் புழுவின் உடல் வெண்மை கலந்து பச்சை நிறத்துடன் வெண்ணிறக்கோடுகளுடன் காணப்படும். உடலின் பின்பகுதி உயர்ந்து காணப்படும். பூச்சி தாக்கிய பயிர்களின் இலைகள் கடித்து தின்றது போல் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த புழுக்களை சேகரித்து அழிக்கலாம். தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம். பூசணி இலைப்புழு எனப்படும் டயபேனியா இண்டிகா புழு பச்சை நிறத்தில் காணப்படும். உடலின் மேல்பகுதியில் வெண்ணிறக்கோடுகள் காணப்படும். இதன் இளம்புழுக்கள் பச்சையத்தை சுரண்டி தின்று சேதப்படுத்தும்.


     இலைகளை சுருட்டி மெல்லிய நூலாம்படையில் இருந்துகொண்டு சாப்பிடும். பூக்களை சாப்பிட்டு சேதப்படுத்தும். மேலும் காய்களில் துளையிட்டு சேதப்படுத்தும். இவற்றை கட்டுப்படுத்த புழுக்களை சேகரித்து அழிக்கலாம். தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். மேற்கண்டவாறு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி பூசணிக்காயை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.