Tuesday, June 11, 2013

வெண்டை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்

வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் வெண்டை சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிறைந்த லாபம் பெறலாம்.
இது குறித்து, வாசுதேவநல்லூர் வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் முஹைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நிலம் தயாரித்தல்: 3 முதல் 4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 மெட்ரிக் டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளிவிட்டு வரிப் பாத்திகள் அமைக்க வேண்டும்.
உரமிடுதல்: அடியுரமாக, ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்கள் இட்டு நன்கு கலந்துவிட வேண்டும்.
மேலுரமாக, விதைத்த 30-ஆம் நாள் 50 கிலோ தழைச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். விதைத்த 45-ஆம் நாள் 50 கிலோ தழைச்சத்து உரங்களை இடவேண்டும்.
இலை வழி உரம்: விதைத்த 40 மற்றும் 60-ஆம் நாள் நுண்ணூட்டச் சத்து கலவையை 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்: விதைத்த 45-ஆம் நாள் முதல் காய்களை அறுவடை செய்யலாம். பயிரின் 90-100 நாள்கள் வரை இருக்கும் காய்களை நார் பிடிக்கும் முன் ஒருநாள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும்.
நன்கு பராமரிக்கப்பட்ட வயலில் ஒரு ஹெக்டேருக்கு 15-18 டன் வரை மகசூல் கிடைக்கும்.

thanks to dinamani